ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் வீசிய புழுதிப்புயலுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். சேதம் ராஜஸ்தானில் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. ஒரு சில இடங்களில் வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. ஒரு சில இடங்களில் புழுதிப்புயல், அனல் காற்று, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இரவு மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள பாரத்பூர், ஆல்வார் மற்றும் தோல்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. பிறகு சிறிது நேரத்தில் சக்திவாய்ந்த புழுதிப்புயல் வீசியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலையில் இருந்த கார்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. பலி அதிகரிப்பு இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய அதிகாரிகள் கூறுகையில், புழுதிப்புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. பாரத்பூரில் 12 பேரும், தோல்ப்பூரில் 10 பேரும், ஆல்வாரில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆல்வார் பகுதியில் 20 பேரும், பாரத்பூரில் 32 பேரும், தோல்பூரில் 50 பேரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் ஆபத்தான நிலையில், ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், 60 சதவீத காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். இரங்கல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் வசுந்தரா ராஜே, மீட்பு பணிகளை முடுக்கிவிடவும், தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆக்ராவுக்கு அதிக பாதிப்பு உ.பி.,யில் நேற்று இரவு பல இடங்களில் வீசிய புழுதிப்புயலுக்கு 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 47 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் ஆக்ரா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும், 43 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். புழுதிப்புயலுக்கு பிஜ்னோர், ஷகாரான்பூர், பிலிபட், பிரோஜ்பாத், சித்ரகூட், முசாபர்நகர், மதுரா, கான்பூர், சிதாபூர், மிர்சாப்பூர், சம்பால், பண்டா, கன்னாஜ், ரேபரேலி மற்றும் உன்னாவோ மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...