இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில்,
பெரும்பாலான மாணவர்கள் சராசரி மதிப்பெண் எடுத்தே தேர்ச்சி பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் நீண்ட காலமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு வரையில் 11-ம் வகுப்புக்கு பள்ளி அளவிலான வருடாந்திரத் தேர்வே நடத்தப்பட்டு வந்தது.
பொதுத்தேர்வாக நடத்தப்படாத காரணத்தினால் மாணவர்களும் ஆசிரியர்களும் 11-ம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவமே கொடுக்காமல் இருந்துவந்தனர்.11-ம் வகுப்பின்போது 12-ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் சூழல், தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தொடர்ந்தது. மேல்நிலைக் கல்வியில் அடிப்படை பாட அறிவு இல்லாத காரணத்தினால் பிளஸ் 2 தேர்வில் அதிகமதிப்பெண் பெற்றும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் செமஸ்டரில் பல பாடங்களில் தோல்வி அடைந்தனர்.200-க்கு 199, 198 கட்-ஆப் மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மேல்நிலைக் கல்வியில் போதிய அளவு அடிப்படை பாட அறிவு பெற முடியாத காரணத்தினால் ஐஐடி, நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள முடியவில்லை.இந்த நிலையில், மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், பாடங்களில் தேவையான அடிப்படை அறிவு பெறச்செய்யும் வகையிலும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டுவர தமிழக அரசு முடிவுசெய்தது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வித்தாள் முறை மாற்றம்
அதோடு மதிப்பெண்ணும் 200-லிருந்து 100 ஆக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 11-ம் வகுப்புக்கு முதலாவது பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. பள்ளி மாணவ -மாணவிகள், தனித்தேர்வர்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். கேள்வித்தாள் முறை மாற்றப்பட்டதால் அனைத்து தேர்வுகளுமே கடினமாக இருந்ததாக மாணவர்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவியது.மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 3-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. இருப்பினும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முன்கூட்டியே முடிவடைந்துவிட்டதால் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25-ம் தேதியே தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் 74 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. அரசு தேர்வுத்துறையின் திட்டப்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை மே 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வதந்தி பரவியபடி உள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறையினரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: பிளஸ் 1தேர்வில் மொழிப்பாடத்தில் தியரி தேர்வில் கருத்தியல் தேர்வுக்கு 90 மதிப்பெண். அகமதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண். கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெற 90-க்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதேபோல், செய்முறைத்தேர்வு உடைய பாடங்களில் செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டுக்கு 30 மதிப்பெண்.கருத்தியல் தேர்வுக்கு 70 மதிப்பெண்.
தேர்ச்சி பெறுவதற்கு கருத்தியல் தேர்வில் 70-க்கு குறைந்தபட்சம் 15 மதிப்பெண் எடுக்க வேண்டும். பெரும்பாலும் செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீட்டுக்கு முழு மதிப்பெண் கிடைத்துவிடும். எனவே, பாடங்களில் தேர்ச்சி பெறுவதில் மாணவர்களுக்கு சிரமம் இருக்காது. பெரும்பாலான மாணவர்கள் பாடங்களில் சராசரி மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுவருவதாக விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. வழக்கமாக பொதுத்தேர்வுகளில் கணிசமான மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பார்கள். அந்த வகையில், 11-ம் வகுப்பு தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை முன்பு போல அதிகமாக இருக்காது.
தேர்வில் தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் ஜூன் இறுதியில் நடத்தப்படும் துணைத்தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெறலாம். அப்போதும் ஒருசில பாடங்களில் தோல்வி அடையும் பட்சத்தில் பிளஸ் 2 படிக்கும்போது எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளிவந்தவுடன் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அவர்கள் பிளஸ் 2 முடிக்கும்போது, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளின் மதிப்பெண்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்படும் என்றனர்.பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...