வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம். 2019 மார்ச் வரை, அபராதத்துடன் வரி செலுத்த முடியும். இந்த ஆண்டில் வரி செலுத்தாமல், அரசை ஏமாற்றுவோரை கண்டறிய, பல உத்திகளை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர்.
வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: வருவாயை காண்பிக்காமல், பல்வேறு வசதிகளை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர, இந்த ஆண்டு, பல புதிய திட்டங்களை செயல்படுத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், பல ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்துபவர்கள் பட்டியலை, சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெற்று, அதற்கான வருவாய் ஆதாரம் குறித்து விளக்கம் கோரவுள்ளனர்.
இதுதவிர, வேறு சில திட்டங்களை செயல்படுத்தவும், அதன் வாயிலாக, வரி கட்டாதவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...