சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா
பள்ளியில், 1-ம் வகுப்பில் மாணவரை சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது,
அந்த பள்ளியின் முதல்வர் கையும், களவுமாக சி.பி.ஐ. போலீசாரிடம்
பிடிபட்டார்.
தீவிர விசாரணைக்கு பிறகு அவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
பொதுவாக அரசு பள்ளிகளை விட தனியார்
பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி
வருகிறார்கள். தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, பள்ளிகளில் மாணவர்களை
சேர்ப்பதில் பெற்றோர்கள் கடுமையான போராட்டத்தை சந்திக்கிறார்கள். தனியார்
பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்கு ஒரு ‘சீட்’ ரூ.6 லட்சம் வரை விலை
பேசி விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. பள்ளிகளில் ‘சீட்’
வாங்கிக்கொடுப்பதற்கு இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி
பயிற்றுவிக்கப்படுவதாக நல்ல பெயர் உள்ளது. இதனால் கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டும்
நிலை உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஐ.ஏ.எஸ்,
ஐ.பி.எஸ். மற்றும் முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகள் அதிக அளவில்
படிக்கிறார்கள். தற்போது இந்த நல்ல பெயரை கெடுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி
சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ம்
வகுப்பில் மாணவனை சேர்ப்பதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கேந்திரிய
வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஒருவரை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது
செய்தனர்.
சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய
வித்யாலயா பள்ளியில் முதல்வராக பணியாற்றும் ஆனந்தன் (வயது 54) என்பவர் தான்
லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு சிறந்த
ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர். அப்போதைய ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜியிடம் தேசிய விருதை வாங்கியுள்ளார். அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மாணவ- மாணவிகள்
சேர்க்கப்படுகிறார்கள்.
சென்னை அசோக்நகரைச் சேர்ந்த காய்கறி
வியாபாரி ராஜேந்திரன் என்பவர், தனது மகனை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பத்திருந்தார்.
தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கீட்டில் தனது மகனுக்கு 1-ம் வகுப்பில் ‘சீட்’
ஒதுக்கி தரும்படி விண்ணப்ப மனுவில் கோரியிருந்தார். ராஜேந்திரனின் மகனுக்கு
‘சீட்’ தர வேண்டும் என்றால் ரூ.1½ லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று பள்ளி
முதல்வர் ஆனந்தன் கேட்டதாக தெரிகிறது. இதைக் கேட்டு ராஜேந்திரன் அதிர்ச்சி
அடைந்தார்.
இருந்தாலும் ரூ.1½ லட்சம் தருவதாக அவர்
ஒப்புக்கொண்டுள்ளார். முதல்கட்டமாக ரூ.1 லட்சத்தை தர வேண்டும் என்றும்,
அடுத்து அவரது மகனை பள்ளியில் சேர்க்கும்போது மீதிபணம் ரூ.50 ஆயிரத்தை
தரவேண்டும் என்றும் பள்ளி முதல்வர் ஆனந்தன் ராஜேந்திரனிடம் கண்டிப்பாக
கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேந்திரன் சென்னை சி.பி.ஐ.
போலீஸ் டி.ஐ.ஜி. துரைகுமாரிடம் நேரடியாக புகார் கொடுத்தார். இந்த புகாரைப்
பார்த்து சி.பி.ஐ. போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளி முதல்வர் ஆனந்தனை கையும், களவுமாக
பிடித்து கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். முதல்வர் ஆனந்தன்
அசோக்நகரின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பின்புறம் உள்ள மத்திய அரசு
ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி
அளவில் அவர் பள்ளியில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு
சென்றுகொண்டிருந்தார். வழியில் ராஜேந்திரனை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.1
லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது மாறுவேடத்தில் இருந்த சி.பி.ஐ.
அதிகாரிகள் முதல்வர் ஆனந்தனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்
வேலைபார்த்த பள்ளிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவரது அலுவலகத்தில்
சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை போட்டனர். அவரது வீட்டிலும் சோதனை
நடத்தப்பட்டது. இரவு விடிய, விடிய அவரிடம் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள
சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர் இதுபோல், எத்தனை மாணவர்களின்
பெற்றோர்களிடம் லஞ்சப்பணம் பெற்றுள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை
நடத்தப்பட்டது. விசாரணையின்போது, தன்னைப்போல கேந்திரிய வித்யாலயா பள்ளி
முதல்வர்கள் லஞ்சப்பணம் பெறுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
அதுபற்றி தனிப்படை அமைத்து சி.பி.ஐ.
அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். தீவிர விசாரணைக்கு பிறகு நேற்று
காலையில் பள்ளி முதல்வர் ஆனந்தனை கைது செய்தனர். அவர் சென்னை ஐகோர்ட்டு
வளாகத்தில் செயல்படும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு
வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டதாக நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் செயல்படும் கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக தீவிர விசாரணை
நடத்தப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்தெந்த பள்ளி
முதல்வர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதைப்பற்றிய பட்டியலை ஆனந்தன்
வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாகவும்
கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...