மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியில் போதே 'எப்படி சிந்திக்க வேண்டும்' என்பது
முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும். கல்விமுறை அதற்கேற்றாற் போல்
மாறுதலடைய வேண்டும்.
இந்தியாவில் தற்போதைய பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணம் கிட்டத்தட்ட 10 ல் 8 நபர்களுக்கு இருக்கிறது. வகுப்பறைகளில் கற்பதைக் காட்டிலும் புலம் சார்ந்த கற்றல் மிகவும் அவசியம் என்ற கருத்து இன்று பெரும்பாலான பெற்றோர்களிடையே வலுத்து வருகிறது.
இந்தியாவின் 200 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்தப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பில், சுமார் 20,000 பெற்றோர்கள் பங்கேற்றனர். ஒரு சமூக ஊடகம் நடத்திய இந்த ஆய்வில் - மொத்தமாக 42,000 பேர்கள் கலந்து கொண்டனர்.
வாக்கெடுப்பில் 78% மக்கள் இந்தியாவில் தற்போதைய பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்புவது தெரியவந்தது. வெறும் 2% மக்களே தற்போதுள்ள பாடத்திட்டம் சரியானது என வாக்களித்திருந்தனர்.
41% பெற்றோர்கள் புலம் சார்ந்த பாடத்திட்டம் அவசியம் எனக் கருதினர். 30 சதவீதத்தினர் லைஃப்ஸ்கில் என்று சொல்லப்படக் கூடிய வாழ்க்கை மதிப்பூட்டக் கல்விமுறை தங்கள் குழந்தைகளுக்கு அவசியம் எனக் கருதினர். ஆய்வில் 16 சதவீதத்தினர் பாடத்திட்டத்தின் தொழில்நுட்ப அடைப்படையிலான கல்விமுறையின் மீது விருப்பம் கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். 13 % பெற்றோர் மாணவர்களின் தற்போதைய பாடத்திட்டத்தில் தற்போது மனித சமூகம் சந்தித்துக் கொண்டுள்ள "உண்மையான பிரச்சினைகள்" குறித்தும் பாடங்கள் சேர்க்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இதில் பெரும்பான்மையாக 90% மக்கள் பள்ளி பாடத்திட்டத்தில் "கற்றுக் கொள்வது மற்றும் சிந்தித்துப் பார்ப்பது எப்படி" என்பது குறித்து மாணவர்கள் அறிந்திருப்பது மிக முக்கியம் என்று கூறியிருந்தனர். ஆனால், 5% மக்கள் அது மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டால் போதும் என்று கூறியிருந்தனர், 4% மக்கள் கற்றல் முறைகளிலேயே அவை வந்து விடுவதால் தனியாக அதற்கென பாடத்திட்டங்கள் தேவை இல்லை எனவும் கூறியிருந்தனர்.
88 சதவிகிதத்தினர் அனைத்துப் பள்ளிகளிலும் திறன் சார்ந்த படிப்புகள் 9 ஆம் வகுப்பிலிருந்தே அறிமுகப்படுத்த வேண்டும் என்று கருதினர், ஏனெனில்... ஏட்டுக் கல்வியில் சிறக்காத குழந்தைகளுக்கு இந்த திறன் முறைக் கல்விகள் எதிர்காலப் பொருளீட்டலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்... ஆனால் 10 % பேர் 9 ஆம் வகுப்பிலிருந்தே திறன் கல்விகளை கற்பிப்பது என்பது மிகவும் விரைவான முறை. குழந்தைகளின் பாடத்திட்டத்தில் அத்தனை விரைவு தேவை இல்லை எனக் கருத்துக் கூறியிருந்தனர்.
48 சதவீதத்தினர் சமூகத் தன்னார்வ சேவைப் பணிகளைச் செய்வதை உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களிடையே கட்டாயமாக்க வேண்டும் என்று கருத்து கூறினர். சுமார் 24% பேர் அது உயர்நிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் விருப்பம் சார்ந்தது எனப் பதிலளித்திருந்தனர். அதே நேரத்தில் 2% இதைப் பற்றி எந்தவிதமான கருத்தையும் கூற விரும்பவில்லை.
இந்த ஆய்வு முடிவுகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் ஆழ்ந்த பரிசீலனையின் பின் மாணவர்களின் பிற நடவடிக்கைகளுக்கு நேரத்தை செலவிடுவதற்கோ அல்லது தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டத்தைப் பாதியாக குறைப்பது குறித்தோ முடிவெடுக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...