மறைந்த ஜெயலலிதா
முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம்
சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதேபோல் கோவை காந்திபுரம் பஸ்நிலையம், சேலம் மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களிலும் ‘வை-பை’ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடக்க நாளான நேற்று மெரினா கடற்கரை வந்த இளைஞர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்று ‘வை-பை’ வசதியை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொண்டனர்.
‘அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது என்ற விவரம் வருமாறு:-
ஆண்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்றதும் அவர்களது செல்போன் ‘வை-பை’ ஆன் செய்ததும் பல நெட்ஒர்க் சேவைகளை காட்டும். அதில் ‘அம்மா வை-பை’ என்ற நெட் ஒர்க்கை இணைப்பில் எடுத்துக் கொண்டால் உள் நுழையும் பக்கம் காண்பிக்கும். அதை கிளிக் செய்து திறந்ததும் பதிவு செய்யும் பக்கம் வரும்.
அதில் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரியை பதிவு செய்ததும் எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. எண் வரும். அந்த ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்ததும் ‘வை-பை’ இணைப்பு கிடைத்து விடும்.
அதன்பிறகு கூகுள், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இங்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே ‘வை-பை’ இலவசமாக கிடைக்கும். 20 நிமிடம் முடிந்ததும் தானாகவே இணைய தள இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.
தொடர்ந்து கட்டணம் செலுத்தும் பக்கம் செல்போனில் தோன்றும். அதில் 1 மணி நேரம், 2 மணி நேரம் பேக்கேஜ் காண்பிக்கும். அதில் தேவையான பேக் கேஜ்ஜை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு ரூ.10, ரூ.20 என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...