Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

 தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நாளை (16ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 18 வயது வரையிலான குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 6 முதல் 14 வயதுடைய இடைநின்ற அல்லது பள்ளிச் செல்லா குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளிச் செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவதற்கான குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி ஏப்ரல், மே மாதம்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதியாண்டு (2018-19) முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய இரு திட்டங்கள் இணைந்து செயல்படும் புதிய வியூகம் இருப்பதால் அடிப்படை விவரங்களை சேகரிக்கும் பொருட்டு இந்த கணக்கெடுப்பில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச்செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிய திட்டமிடப்
பட்டுள்ளது.

தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக் கருத வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும் இதில் அடங்குவர். மேலும் பள்ளியே செல்லாத குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள், அனைவரும் ‘பள்ளிக்கு வெளியே உள்ளவர்கள்’ ஆவர்.  அரசாணைப்படி 6 - 14 வயதுடைய பள்ளிச் செல்லா அல்லது இடைநின்றோரை கண்டறிந்து பள்ளிகளில் அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும். இத்துடன் கூடுதலாக இந்த ஆண்டு 15-18 வயதுடைய குழந்தைகளில் இடைநின்றோரை கண்டறிந்து பட்டியல் தயாரித்து வைத்தல் அவசியமாகும், அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 16ம் தேதி (நாளை) கணக்கெடுக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்-குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்து, மாவட்டத்திலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர். எனவே தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும்போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து சோதனை நடத்த வேண்டும். வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கூடவே மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடர்பான விபரங்களையும் தனியே கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive