Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்! - இன்று, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

இன்று, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். இந்த நாளில்,
 'ஆட்டிசம்' என்ற, நரம்பியல் சார்ந்த வளர்ச்சி குறைபாட்டால் 
பாதிக்கப்பட்ட குழந்தைகளும், பெற்றோரும் எதிர்கொள்ளும் 
முக்கிய சிக்கலை பற்றி பார்ப்போம். 

'எந்தக் குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படக் 
கூடாது' என்பது, பொதுவான விதி. அத்தகைய உரிமையை,
 அறிவுசார் வளர்ச்சிகுறைபாடு உடைய ஆட்டிசம் குழந்தைகள் 
எதிர்கொள்ளும் போது, சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். குழந்தை 
பிறந்த, 18வது மாதத்தில், ஆட்டிசத்தின் சாயல் இருப்பதை 
கண்டறியலாம்; ஆனால், மூன்று வயதுக்கு மேல், பாலர் பள்ளி
 செல்லும் பருவத்தில் தான், பல பெற்றோர், இதை கண்டு 
கொள்கின்றனர். 

இந்நோயின் பாதிப்பு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு 
மாதிரியாக இருக்கும். எந்த சோதனை வாயிலாகவும், இதை 
அறிய இயலாது. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, ஒரே 
மாதிரியான பயிற்சி, கல்வி சரி வராது; இயல்பை பொறுத்து, 
ஒவ்வொருவருக்கும் தனிக்கல்வி வகுக்கப்பட வேண்டும். 
அதனால் தான், பயிற்சியாளர்கள், உளவியல், நரம்பியல் 
மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோரிடம், முதலில் 
ஏராளமான கேள்விகளை கேட்டு, அதன் மூலம் குழந்தையின் 
நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்ப்பர். அதில் கிடைக்கும் 
முடிவுகள் அடிப்படையில், குழந்தைக்கு தேவையான 
பயிற்சிகளை வடிவமைப்பர். 

அதேநேரத்தில், குழந்தையின் நோய் பாதிப்பின் தீவிரத்தை 
பொறுத்து, குழந்தைக்கு, சிறப்பு பள்ளியா அல்லது இயல்பான
 பள்ளியா, இரண்டில், எது பொருத்தமானது என்பதை, 
பெற்றோரிடம் பரிந்துரை செய்வர்.குழந்தைக்கான பாதிப்பு,
 மிக குறைவாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும் போது 
மட்டுமே, சாதாரண பள்ளியில் சேர்க்க, சிபாரிசு செய்வர்.
சாதாரண குழந்தைகளையே பள்ளியில் சேர்க்க, பெற்றோர் 
படாதபாடுபடும் இந்நாளில், ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஏற்ற 
பள்ளி கிடைப்பது, மேலும் சிக்கலாகிறது.இத்தகைய சூழலில், 
பெற்றோர் முன் இருப்பது, அரசு பள்ளி அல்லது தனியார் பள்ளி 
என்ற இரண்டு தெரிவுகள் தான்.

அனைவருக்கும் கல்வி என்பதையும், 14 வயதுக்கு உட்பட்ட 
சிறாருக்கு கட்டாயக்கல்வி என்பதையும், கொள்கையாகவே 
வைத்திருக்கும், நம் அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் 
எப்பள்ளியானாலும், இப்படிப்பட்ட குழந்தைகளை சேர்த்தே 
ஆக வேண்டும்.அதேநேரத்தில், தனியார் பள்ளிகளுக்கு 
இப்படிப்பட்ட கட்டாயம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 
இருப்பினும், ஒரு சில தனியார் பள்ளி நிர்வாகங்களே, 
ஆட்டிசம் குழந்தைகளை, பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றன. 

அவர்களில் ஒரு பிரிவினர், உண்மையிலேயே சேவை 
நோக்குடனும், மற்றொரு பிரிவினர், பணம் பறிக்கும் 
எண்ணத்துடனுமே, சிறப்பு குழந்தைகளை சேர்க்கின்றனர்.
எனவே, பெற்றோரிடம் மீதமிருக்கும் ஒரே வழி, அரசு பள்ளிகள் 
மட்டுமே. அரசுப் பள்ளிகளில், இவர்களுக்கு இடம் கிடைத்து 
விடுகிறது.ஆனால், பள்ளி வளாகத்திற்குள், இவர்களுக்கு 
கிடைக்க வேண்டிய கல்வியும், மற்ற மாணவர்களோடு 
கலந்து வாழும் சூழலும் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, 
90 சதவீதம் இல்லை என்றே சொல்லலாம்.அரசு சட்டம் 
இயற்றலாம்; விதிமுறைகளை உருவாக்கலாம்; ஆசிரியர்களுக்கு 
பணியிடை பயிற்சிகள் அளிக்கலாம். ஆனால், உண்மையான 
மாற்றம் வர வேண்டியது, மனிதர்களின் மனதில் தான். 

பரந்து, விரிந்த மனம் உடைய நல்லாசிரியர்கள், மிகச்சிலரே 
உள்ளனர். மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு துவங்கி, 
பல்வேறு பணிச்சுமைகள் ஆசிரியர்களுக்கு உள்ளன. இதில், 
சிறப்பு குழந்தைகளையும் சேர்த்து, 'நாம் ஏன் பார்த்துக் 
கொள்ள வேண்டும்' என்ற, எண்ணமே, பல ஆசிரியர்களிடம் 
மேலோங்கி இருக்கிறது.இதனால் தான், அரசு பள்ளிகளை 
நாடும் பெற்றோரிடம், தினம் தினம் அவர்களின் குழந்தைகளைப் 
பற்றிய புகார் பட்டியலை, ஆசிரியர்கள் வாசிக்கின்றனர்.
'வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள்; வருகை பதிவேட்டில், 
'அட்டன்டென்ஸ்' போட்டு விடுகிறோம்' என, இக்குழந்தைகளை 
வீட்டுக்கு அனுப்பும் ஆசிரியர்களே அதிகம்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படியே, சாதாரண பள்ளிகளை, 
பெற்றோர் அணுகுகின்றனர்.ஆட்டிசம் குழந்தைகளின் சமூக
 புரிதலுக்கு, சம வயதுடைய குழந்தைகளுடன் கலந்து பழகவும், 
விளையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டியது இப்பள்ளிகளின் 
கடமை என்பதை, ஆசிரியர்கள் மறந்து, பிள்ளைகளை 
வீட்டுக்குள்ளேயே முடக்குகின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பாக, பணியில் 
அமர்த்தப்பட்டிருக்கும் சிறப்பு ஆசிரியைகள், நாள் ஒன்றுக்கு 
இரண்டு பள்ளிகள் வீதம், குறைந்தபட்சம், பத்து பள்ளிகளுக்காவது, 
ஒவ்வொரு மாதமும் செல்ல வேண்டி யிருக்கிறது.தீவிர பாதிப்பு 
காணப்படும் குழந்தைகளுக்காக, வட்டார அளவில் இயங்கும், 
'டே கேர் சென்டர்'களுக்கு வாரம் ஒருமுறை செல்ல வேண்டி 
இருக்கிறது. இப்படியாக, அவர்களுக்கும் பணிச்சுமை 
அதிகமாகவே உள்ளது.

சாதாரண குழந்தைகளுக்கு, 30 பேருக்கு ஒரு ஆசிரியர் 
இருக்க வேண்டும் என்ற கணக்கில், ஆசிரியர்களை 
நியமனம் செய்தால், சிறப்பு குழந்தைகளுக்கோ, ஐந்து 
பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஆசிரியர்கள் இருந்தாக 
வேண்டும்.அப்படி இல்லாததால், மாதம் ஒரு முறை, 
பள்ளிக்கு, 'ப்ளையிங் விசிட்'டில் வரும் சிறப்பாசிரியர், 
அவரது ஆவண வேலைகளை மட்டுமே, பெரும்பாலும் 
செய்யமுடிகிறது.இக்குழந்தைகளை கையாளும் 
வகுப்பாசிரியர்களிடம் அரை மணி நேரம் கூட பேசுவதில்லை. 

இந்நிலையில், ஆசிரியர்கள், இக்குழந்தைகள் விஷய மாக 
ஏற்படும் சந்தேகங்களை யாரிடம் தான் கேட்க முடியும்.
அடுத்த பணியிடை பயிற்சி வரும் வரை, இக்குழந்தைகளை 
எப்படி சமாளிப்பது என்றே, அவர்கள் குழம்புகின்றனர். 
சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, 
அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் 
விபரத்தை ஒருவர் கேட்டிருக்கிறார்; அரசு தரப்பிலிருந்து உரிய 
பதில் வராமல், ஏதேதோ சொல்லி, சமாளிப்பு பதில் 
கிடைத்திருக்கிறது.

மேல் முறையீடு செய்தும், உரிய பதில் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளில், மாற்றுத்திறன் 
மாணவர்களின் எண்ணிக்கையை அரசு கணக்கிட வேண்டும். 
அதன் அடிப்படையில், தொடக்கப் பள்ளிகளில், இக்குழந்தைகளை 
கையாள, சிறப்பு, பி.எட்., படித்த, ஒரு சிறப்பாசிரியை கட்டாயமாக 
பணி நியமனம் செய்ய வேண்டும்.அவர்கள் சாதாரண வகுப்புகளை 
எடுக்கும் அதேநேரம், பிற வகுப்புகளில் இருக்கும், சிறப்பு 
குழந்தைகளை கையாள்வதற்கு, அந்தந்த வகுப்பாசிரியருக்கு 
உதவவும் முடியும். மேலும், மற்ற குழந்தைகளிடமும், சிறப்பு 
குழந்தைகளோடு பழகும் விதம் பற்றி, புரிய வைக்கவும் முடியும்.
இதுவே, உண்மையில் ஒன்றிணைந்த கல்விக்கான, ஒரு வாய்ப்பை 
உருவாக்கித்தரும். ஆட்டிசம் குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் 
முழுவதும் அதிகரித்து வருகிறது.அதையும் கருத்தில் கொள்ள 
வேண்டும். எதிர்காலத்தையும் கணக்கிட்டு அதை நோக்கியே, 
நம் பயணம் இருத்தல் வேண்டும். அப்போது மட்டுமே, 
எல்லோரையும் போல, இந்த சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரும், 
நிம்மதி பெருமூச்சு விடுவர்.- யெஸ்.பாலபாரதி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive