மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’
தேர்வு மே மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த தேர்வில் பங்கு
பெற மாணவர்கள் பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூரை
சேர்ந்தவர் பெருமாள். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் ஸ்ரீவிஜி (வயது
17). இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருக்கிறார்.
நேற்று முன்தினம் ஸ்ரீவிஜி, ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக ஆன்லைன் மூலம்
விண்ணப்பித்தார்.
இதில் தேர்வு மையங்களை தேர்வு செய்யும்போது
சென்னை, காஞ்சீபுரம், நெல்லை ஆகிய மண்டலங்களை குறிப்பிட்டு இருந்தார்.
ஆன்லைன் விண்ணப்ப பதிவேற்றம் முடிந்ததும் அவருக்கு ‘ஹால் டிக்கெட்’
வழங்கப்பட்டது. அதில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார்
பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு
இருந்தது.
தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ளது. இதை பார்த்த மாணவி ஸ்ரீவிஜி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை பெருமாள்
கூறுகையில், ‘எனது மகளுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம்
ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு கூட இதுபோன்ற
குழப்பங்கள் கிடையாது. இப்போது இந்த தேர்வு மையத்தை மாற்ற முடியுமா? அல்லது
அங்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டுமா? என்று தெரியவில்லை.
‘நீட்’ தேர்வு வேண்டும் என்று கூறும்
ஆதரவாளர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதனால் எனது மகளின்
மருத்துவக்கல்வி கனவு என்ன ஆகுமோ? என்ற பயம் எனக்கு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்பத்தில் இருந்தே ‘நீட்’ தேர்வு பல்வேறு
குளறுபடிகளை சந்தித்து வந்த சூழலில், தமிழக மாணவி ஒருவருக்கு கேரள
மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் நீட்
தேர்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...