மதுரை:தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு
(டயட்) மத்திய மாநில அரசுகள் ஒதுக்கும் நிதி, செலவினங்களை கண்காணிக்க
நிதிக்காப்பாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், என
எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தில் மொத்தம் 32 'டயட்'கள் உள்ளன. ஆசிரியர் பயிற்சி படிப்புடன்,
இடைநிலை முதல் மேல்நிலை வரை ஆசிரியர்களுக்கு பல பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய, மாநில அரசுகள் நிதி
ஒதுக்கீடு செய்கின்றன.இதனால் நிதி, செலவினங்களை முறைப்படுத்த, கண்காணிக்க
நிதிக்காப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்
துவங்கப்பட்ட சென்னை, ராணிப்பேட்டை, ஆடு துறை உட்பட ஏழு 'டயட்'களில்
இப்பணியிடம் உள்ளது.
ஆனால் அதன் பின் துவங்கப்பட்ட 25 'டயட்'களில் இப்பணியிடம்
உருவாக்கப்படவில்லை. இதனால் 'டயட்' முதல்வருக்கு கீழ் உள்ள சிலர் தான் நிதி
செலவினங்களை கண்காணிக்கின்றனர். இதில் பயிற்சி நடத்தப்பட்டதாக போலி
'பில்'கள் இணைப்பது உட்பட பல முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மாநில
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலகம் சார்பில் தணிக்கை
செய்யப்பட்டாலும், பெயரளவில் நடப்பதாக சர்ச்சை உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி அலுவலக பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முகானந்தம்,
பொருளாளர் துரைப்பாண்டி கூறியதாவது: ஆரம்பத்தில் துவக்கப்பட்ட 'டயட்'களில்
உள்ள நிதிக்காப்பாளர் பணியிடங்களை, அடுத்தடுத்து துவக்கப்பட்ட 'டயட்'களில்
ஏன் உருவாக்கவில்லை. முதல்வர் என்பவர் நிர்வாகம், பயிற்சி சார்ந்த பணிகளில்
தான் கவனம் செலுத்த முடியும். அரசு நிதி, செலவினங்களில் செலுத்த முடியாது.
இதனால் நிதி முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க அனைத்து
டயட்களிலும் நிதிக்காப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...