சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி
உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள், நேற்று 3-வது நாளாக
நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களுடைய போராட்டத்தை
தொடர்ந்தனர்.
ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடருவதால், பலர் மயக்கம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்
இயக்க பொதுச்செயலாளர் ராபர்ட் கூறுகையில், ‘எங்களுடைய அறவழி உண்ணாவிரத
போராட்டத்துக்கு அரசு எந்த வித உறுதியான பதிலும் தெரிவிக்கவில்லை. ஒற்றை
கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பான அரசு ஆணை வெளியிட்டால் தான் நாங்கள்
போராட்டத்தை கைவிடுவோம். அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்’
என்றார்.
3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி
வரும் இடைநிலை ஆசிரியர்களை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற
எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் சந்தித்தார்.
அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காப்பாற்றப்படவில்லை
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது,
நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். அப்போது இதே அ.தி.மு.க. அரசு, 110
விதியின் கீழ் சட்டமன்றத்தில் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறதை செய்து
கொடுப்போம் என்ற உறுதியை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த உறுதிமொழி
இதுவரை காப்பாற்றப்படவில்லை.
அதை வலியுறுத்தி போராடி வரும் உங்களுக்கு,
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலே ஆறுதலாக மட்டுமல்ல, பக்கபலமாக இருப்போம்
என்ற உறுதியை சொல்வதற்காக தான் வந்தேன். எனவே இதுகுறித்த நீண்ட அறிக்கையை
அரசுக்கு வலியுறுத்தும் வகையிலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு
சுட்டிக்காட்டும் வகையிலும் எனது பணியை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.
போராட்டக்களமாக இருக்கிறது
இன்று தமிழகமே போராட்டக்களமாக மாறி
இருக்கிறது. எங்கு பார்த்தாலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,
உண்ணாவிரதங்கள் தான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சியில்
இருக்கக்கூடியவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காகவே
இருக்கிறார்கள். மக்களை பற்றி கவலைப்படவில்லை. அவர்களின் உணர்வுகளை
சிந்தித்து பார்க்கவில்லை.
உங்களை பற்றி சிந்திக்காத இந்த ஆட்சிக்கு
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலே உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவேன்.
அறிக்கையின் வாயிலாக சுட்டிக்காட்டுவேன். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட
அமைச்சர், அதிகாரிகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு விவாதிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் தங்கி
இருக்கும் பள்ளியில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும்,
நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரியுடன் பேச்சு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை
ஆசிரியர்களை சந்தித்துவிட்டு திரும்பிய மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வி துறை
செயலாளர் பிரதீப் யாதவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆசிரியர்களின்
கோரிக்கைகளில் உள்ள அடிப்படை நியாயங்களை எடுத்துரைத்தார்.
மேலும், உண்ணாவிரத போராட்டத்தில்
ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில் ஏராளமானோர் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதை விரிவாக எடுத்துக்கூறி, உடனடியாக
தமிழக அரசின் கவனத்துக்கு உண்மை நிலவரங்களை கொண்டு சென்று, உரிய நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக,
பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...