சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் பாடத்திட்டங்கள்
மாற்றியமைக்கப்படும் என்றார் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.
செங்கோட்டையன்.
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு சிவானி , தொட்டியம் கொங்குநாடு
பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்று வரும் போட்டித் தேர்வுகளுக்கான உண்டு
உறைவிடப் பயிற்சி மையத்தில் நடைபெற்று வரும் வகுப்புகளை வெள்ளிக்கிழமை
பார்வையிட்ட அவர், மாணவ, மாணவிகள் மத்தியில் பேசியது: நீட் தேர்வு
மட்டுமல்ல, எந்தப் போட்டித் தேர்வானாலும் எதிர்கொள்ளும் விதத்தில் அரசுப்
பள்ளி மாணவர்களைத் தயார் செய்ய பள்ளிக் கல்வித் துறை உதவும். சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டங்கள் விரைவில்
மாற்றியமைக்கப்படும். எனவே மாணவர்கள் அரசு அமைத்துள்ள பயிற்சி மையங்களைப்
பயன்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடைய
வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது: பள்ளிக் கல்வித் துறைக்குத்
தமிழக அரசு நிகழாண்டில் ரூ.27,205 கோடி நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க முனைப்பான
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்
கொண்டு வரும் ஆண்டில் தமிழகத்தில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்
தொடங்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்புந்தப்புள்ளிகள் விடப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.60 கோடி
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 9, 10, 11, 12 ஆம்
வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகளுக்காக ரூ.463
கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1, 6, 9, 11 ஆம்
வகுப்புகளுக்கானபுதிய பாடத்திட்டங்கள் மே மாதம் வெளியிடப்படும். இந்த
பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ஜூன் 1 ஆம் தேதி
பள்ளித் திறக்கும் நாளன்று மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு
குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகும். இதில் எவ்வித
சிக்கலும் இல்லை. மாணவர்களிடம் செல்லிடப்பேசி எண்கள் பெறப்பட்டிருப்பதால்
எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
விடைத்தாள் திருத்தும் பணியில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றார்
செங்கோட்டையன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...