Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இந்தப் புதிய திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இப்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கென தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இருமுறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது. 
தேர்வர்களுக்கு இதனால் ஏற்படும் பண விரயம், காலவிரயத்தினை வெகுவாகக் குறைக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய மூலச்சான்றிதழ்களை (Original Certificate) ஸ்கேன் செய்து அவற்றை பதிவேற்றம் செய்யும் முறையினை தேர்வாணையம் தற்போது முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது.
இந்த நடைமுறையானது, வரும் 23 -ஆம் தேதி நடைபெறும் குரூப் -2ஏ பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலிருந்து தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், மே 4 -ஆம் தேதிக்கு முன்பாக தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஐந்து ரூபாய் கட்டணம்: இதற்கென மூலச் சான்றிதழ்களின் (Original Certificate) ஸ்கேன் படிமத்தின் தரத்தை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து தாலுகா, தலைநகரங்களிலும் செயல்பட்டு வரும் இ -சேவை மையங்கள் வழியாக ஸ்கேன் (Scan) செய்து பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சான்றிதழை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக பொதுச் சேவை மையங்களில் வசூலிக்கப்படும்.
இந்தப் புதிய நடைமுறையில் இணையவழி மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித் தகுதிகளின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டும் தரவரிசைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தேர்வாணைய அலுவலகத்துக்கு மூலச் சான்றிதழ்களுடன் நேரில் வந்தால் போதுமானது. இதனால், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் கால மற்றும் பண விரயம் வெகுவாகக் குறையும்.
பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்: மூலச் சான்றிதழ்களின் தெளிவான வண்ணப்படிமம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படவேண்டும். விண்ணப்பதாரர்களின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் பொதுச் சேவை மையங்களின் பட்டியல் முகவரியுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வின் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பிற்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட தேதியிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ சான்றிதழ்களின் படிமநகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யும் முன்பு சான்றிதழ்களின் படிமநகல் தெளிவாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் கோரியுள்ள தகுதிக்கான சான்றிதழ்கள் ஏதேனும் பதிவேற்றம் செய்யப்படாமல் விடுபட்டுப்போனால் அவர் பதிவு செய்துள்ள விவரம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.
அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது அவர் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களின் தகுதிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவருக்கு இந்த தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்று கருதி அவரது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு மட்டுமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தால் போதுமானது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்குப் பிறகு அதற்கான இணையப் பக்கம் முடக்கப்படும். இணைய வழியன்றி ஏனைய அஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் சான்றிதழ்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive