மொபைல் கட்டண பேக்கேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்க்க இணையதளத்தை டிராய் ஏற்படுத்தியுள்ளது. மொபைல் நிறுவனங்களின் கட்டண
விவரங்கள் அந்தந்த இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இவை ஒரே இணையதளத்தில்
இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் கட்டண விவரங்களை ஒப்பிட்டு பார்க்க
முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏற்கெனவே
தெரிவித்திருந்தது. இதற்கு வசதியாக, டிராயின் இணையதளத்திலேயே இவற்றை
வெளியிட வேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டிராய்
வலியுறுத்தியிருந்தது. இதற்கேற்ப இந்த ஆண்டு இறுதிக்குள் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் அனைத்தும் தங்களது கட்டண விவரங்களை டிராய் இணையதளத்தில்
சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சந்தாதாரர்கள்
கட்டண விவரங்களை ஒப்பிட்டு பார்க்க www.tariff.trai.gov.in என்ற இணையதள
பக்கத்தை உருவாக்கியுள்ளது.
பரிசோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் டெல்லி தொலைத்தொடர்பு வட்டத்தில் உள்ள மொபைல் நிறுவனங்களின் கட்டண விவரங்கள், தரைவழி தொலைபேசி சேவை அளிக்கும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டண விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனை அளவிலேயே இருப்பதால் குறிப்பிட்ட விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். வாடிக்கையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ஆய்வு செய்து இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்படும். படிப்படியாக நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களின் கட்டண விவரங்கள் தொலைத்தொடர்பு வட்டம் வாரியாக வெளியிடப்படும் என டிராய் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...