ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிரடி வரவால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.65,000 கோடி வரை மிச்சமாகியுள்ளது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2016 செப்டம்பர் மாதம் ஜியோவின் வரவுக்குப் பிறகு தொலைத் தொடர்பு சேவையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் அனைவருக்கும் டேட்டா வசதி கிடைப்பது எளிதாகியுள்ளது.
முன்பு 1ஜிபி டேட்டாவுக்கு ரூ.152 வசூலிக்கப்பட்ட நிலையில், ஜியோவின் வரவுக்குப் பிறகு அந்த கட்டணம் ரூ.10-ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.65,000 கோடி அளவுக்கு மிச்சமாகியுள்ளது.
மேலும், இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும் விறுவிறு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதன் எதிரொலியாக, மாதத்துக்கு டேட்டா பயன்பாடு 200 மில்லியன் ஜிபி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது டேட்டா பயன்பாடு 1 பில்லியன் ஜிபியாக அதிகரித்தது. அதுவும், ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு மாதங்களில் இந்த நிலை ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.
2017-ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி, வாடிக்கையாளர் ஒருவர் மாதம் சராசரியாக 10 ஜிபி டேட்டா, 700 நிமிட அழைப்பு, 134 மணி நேர விடியோ ஆகியவற்றை பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ஜியோவின் வரவு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளாதக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...