சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில்
இடைநிலை ஆசிரியர்கள் 2009-ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
2016-ம் ஆண்டு 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் இதுவரை அரசு
கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
இந்த நிலையில் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள்
நேற்று முன்தினம் டி.பி.ஐ. வளாகத்தை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க
முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோரை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அழைத்துச்
சென்றனர். அங்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை
சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குனருடன் பேச்சுவார்த்தை
நடத்தினர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
மயங்கி விழுந்தனர்
இதையடுத்து ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்
இருந்த இடைநிலை ஆசிரியர்கள் அங்கிருந்து செல்லமறுத்து 2-வது நாளாக நேற்றும்
தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தார்கள். அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி,
பெண்கள் உள்பட ஏராளமானோர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் சில
ஆசிரியைகள் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
2-வது நாள் போராட்டத்தில் நேற்று
ஒவ்வொருவராக 29 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களை சக ஆசிரியர்கள் உதவியுடன்
ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக
அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் சிலர்
கூறுகையில், ‘நாங்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்கவில்லை.
எங்களுடன் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தான்
கேட்கிறோம். இதை அரசு தரமறுப்பது ஏன்? இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால்,
மீண்டும் முதலில் இருந்து போராடுங்கள் என்று சொல்வதுபோல பேசுகிறார்கள்.
சமவேலைக்கு சமஊதியம் தொடர்பான அரசாணையை வெளியிடும் வரை போராட்டத்தை
கைவிடமாட்டோம்’ என்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதற்கிடையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன், முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சங்க முக்கிய நிர்வாகிகள் நேற்று தலைமை
செயலகத்துக்கு சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தது.
இதிலும் எந்த முடிவும் எட்டப்படாததால்
போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து
ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வள்ளுவர்
கோட்டம் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போராட்டத்தை தொடர அனுமதி
அளிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் அனைவரும் நேற்று இரவு அங்கு அழைத்துச்
செல்லப்பட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...