ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்து தங்கள் குழந்தைகள்
என்ன படிக்கலாம் எனத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர்.
இவர்களுக்கு
என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து கல்வியாளர்
நெடுஞ்செழியனிடம் பேசினோம்.“இதுவரை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நெருக்குதலோடு படித்த மாணவர்கள் இனியாவது தங்களுடைய விருப்பத்துக்கும், ஆர்வத்துக்கும் தீனிபோடும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் இன்ஜினீயரிங், மருத்துவம் என நாடிச் செல்லாமல் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறித்து ஆராய்ந்து எதிர்காலப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கல்லூரிப் படிப்பை ஒரு முறைதான் படிக்கப் போகிறோம். அதனால், சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும். சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது உங்களின் வெற்றி வாய்ப்பும் கூடும்.
சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர 80-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. இதில் 75 தேர்வுகள் ப்ளஸ் டூ மதிப்பெண்ணைக் கண்டுகொள்வதில்லை என்பதால் 75 வாய்ப்புகள் இருக்கின்றன. நுழைவுத்தேர்வுகள் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. பழைய கேள்வித்தாள்களிலிருந்து எந்தெந்தப் பாடத்தில் இருந்தும், எந்தப் பிரிவில் இருந்தும் எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், என்ன மாதிரி கேள்வி கேட்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
கடன் வாங்கித் தரமற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய பொருளாதாரத் திறனை மீறிக் கல்லூரியைத் தேர்வு செய்யக் கூடாது. முடிந்தளவுக்கு அரசுக் கல்லூரியில் அதிக பணம் செலவழிக்காமல் சேர்ப்பது நல்லது” என்று ஆலோசனை வழங்கிய நெடுஞ்செழியன், ப்ளஸ் டூ-க்குப் பின்னர் என்னென்ன படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்? என்று வரிசைப்படுத்தினார்.
``ப்ளஸ் டூ முடித்தவுடனே B.S - M.S என்ற ஆராய்ச்சிப் படிப்பை மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். இதற்காக முதல் மூன்று வருடங்களுக்கு மாதம் ஐயாயிரம் ரூபாயும், அதன் பின்பு இரண்டு வருடங்களுக்கு மாதம் ஏழாயிரம் ரூபாயும் கல்வி உதவித்தொகை பெறலாம்.
கோவையில் நூறாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் எட்டு பி.டெக். படிப்புகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு படிப்பில் படித்தாலும் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-யில் படிக்கலாம்.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லையே, பயிற்சியில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குறைந்த கட்டணத்தில் மருத்துவம் சார்ந்த நிறைய படிப்புகள் இருக்கின்றன. பாராமெடிக்கல் படிப்புகளைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி, வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் படிக்கலாம். இதைத்தவிர, மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சொல்லித்தரப்படும் சான்றிதழ் படிப்புகளிலும் சேரலாம். இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படுகின்றன.
பொறியியல் கல்வி பயிலும் ஆர்வம் உள்ள மாணவர்கள் கல்லூரியைத் தவறாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஆண்டு 44 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.
கலை மற்றும் அறிவியல் படிப்பில் படிப்பவர்களுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. வேதியியல், இயற்பியல், கணிதம் போன்ற அடிப்படை அறிவியல் பாடங்களைப் படித்தால் முதுநிலை படிப்பை ஐ.ஐ.டி-ல் படிக்கலாம். இதற்குப் போட்டிகள் மிகவும் குறைவு.
ப்ளஸ் டூ-வில் வணிகவியல், பொருளியல், வரலாறு பாடங்கள் படித்தவர்கள், வணிகவியல் சார்ந்த படிப்புகளையும், தொழில்சார் படிப்புகளாக CA, ICWA, கம்பெனி செக்ரட்டரிஷிப், சட்டப்படிப்பு போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இதற்கு அடுத்து, பி.காம், பி.பி.ஏ, பி.பி.எம், எக்னாமிக்ஸ் போன்ற பாடங்களைப் படிக்கலாம். எந்தப் பிரிவைப்படித்தாலும் அந்தத் துறை சார்ந்த விஷயங்கள் குறித்த தேடல் இருக்க வேண்டும்”என்றார் நெடுஞ்செழியன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...