சென்னை ஐகோர்ட்டில், மொழிவாரி சிறுபான்மையினர் அமைப்பின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும்
மக்களின் குழந்தைகள் தெலுங்கை மொழிப்பாடமாக படித்து வருகிறார்கள். இதுபோன்ற
சூழ்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ்ப்பாடம் கட்டாயம் என்று
அரசு தேர்வுத்துறை கடந்த நவம்பர் 7-ந் தேதி அறிவித்துள்ளது. தெலுங்கை
மொழிப்பாடமாக படித்துவரும் மாணவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இனிமேல்
தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதுவது என்பது இயலாத காரியம்.
தெலுங்கை மொழிப்பாடமாக படித்துவரும் 1600
மாணவர்கள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ளனர். இந்த
மாணவர்கள், தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி,
நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை
விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தேர்வு எழுத விலக்கு
தமிழ்ப்பாடம் கட்டாயம் என்று
கொண்டுவரப்படும்போது, முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு தமிழை
கற்பிக்க வேண்டும். இடைப்பட்ட வகுப்புகளில் தமிழ் பாடத்தை கற்பிக்கத்
தொடங்கினால் அவர்களால் தமிழை முழுமையாக கற்க முடியாது. முதல் வகுப்பில்
சேரும்போதே தமிழ்ப்பாடம் கட்டாயம் என்று அறிவித்து இருந்தால் பிறமொழியை
மொழிப்பாடமாக படித்துவரும் மாணவர்கள் தமிழ்மொழியை கற்று இருப்பார்கள்.
அவ்வாறு இல்லாமல் இடைப்பட்ட வகுப்புகளில்
படித்துக்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி கட்டாயம் என்று அறிவிக்கும்போது
அவர்களால் தமிழ்பாட தேர்வை எழுத முடியாது. எனவே, தெலுங்கை மொழிப்பாடமாக
படித்துவரும் மாணவர்கள் 1600 பேருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ்
பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...