உடுமலை:கம்ப்யூட்டர் முதல் கலை வரை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில்
ஊக்கத்தோடு செயல்படுகிறது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
உடுமலை ஒன்றியத்தில், அதிக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள அரசு
துவக்கப்பள்ளியில், இரண்டாவதாகஇருப்பது எலையமுத்துார் ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளி. இப்பள்ளியில், ஒன்று முதல்ஐந்தாம் வகுப்பு வரை, 147
மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசுப்பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், மாணவர் எண்ணிக்கையில் சரிவை
நோக்கி செல்வதில்,முதன்மையானது துவக்கப்பள்ளிகள் தான். இந்நிலையில்,
கிராமப்புறத்தில் இருக்கும் இப்பள்ளி, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை
கொண்டிருப்பது மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுகிறது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறை வசதிகள், பல வண்ணங்களில்,
பாடங்கள் சித்திரமாய் கொண்டுள்ள வகுப்பறை சுவர்களுமாய் உள்ளது.மூன்றாம்
வகுப்பு முதல், கம்ப்யூட்டர் பயிற்சி கட்டாயம். கம்ப்யூட்டரின் அடிப்படை
செயல்பாடுகளை, மாணவர்களாகவே இயக்கும்அளவுக்கு பயிற்சி பெறுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல், ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது. ஓவியம், கட்டுரை,
பேச்சு, என இலக்கியப் போட்டிகளில் தொடர்ந்து மாணவர்களை ஈடுபடுத்தி,
பரிசுகளையும் பெறுகின்றனர். துவக்க நிலையிலும், நுனி நாக்கு ஆங்கிலத்தில்,
நாடகம் நிகழ்த்தி பாராட்டு பெறுகின்றனர் மாணவர்கள்.குழந்தைகளோடு
குழந்தைகளாய் ஆசிரியர்கள் மாறி, ஆடிப்பாடி பாடம் நடத்துவதை, மழலையருக்கே
உண்டான மொழியில் பின்தொடர்கின்றனர் குழந்தைகள்.
சிறுகதை, தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என இடைநிற்றல் இல்லாமல் பேசி,
குழந்தைகள் பாராட்டு பெறுகின்றனர். அரசுப்பள்ளிகளில் சேரவும், குழந்தைகள்
கல்வி பயிலவும், பெற்றோருக்கு விருப்பம் இருந்தாலும், அதற்கான செயல்வடிவம்
தருவதற்கு, ஆசிரியர்களும் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை இப்பள்ளி
உறுதிப்படுத்தியுள்ளது.
விரைவில் 'ஸ்மார்ட் கிளாஸ்' தலைமையாசிரியர் ஜனகம் கூறியதாவது:
பள்ளிகளுக்கு, அரசு வழங்கும் திட்டங்களை முறையாகவும் முழுமையாகவும்
பயன்படுத்தினாலே, மாணவர்கள் விரும்பும் பள்ளியாக மாறிவிடும். பாடப்புத்தகங்களில்
இருப்பதை மட்டுமின்றி, அவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்துவதிலும்,
துவக்கப்பள்ளிகளுக்கு தான் முதன்மையான கடமை உள்ளது.இதை உணர்ந்து,
செயல்படுவதால், பெற்றோரும், ஒத்துழைப்பு தருகின்றனர். தொழில்நுட்பம் மூலமாக
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த, விரைவில், 'ஸ்மார்ட் கிளாஸ்', திட்டமும்
ஆரம்பமாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...