Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர் - சுற்றுலாப் பேருந்திலேயே பலியான சோகம்!

இப்போதெல்லாம் அழகு தமிழில் கவர்ச்சியான வாசகங்களைப் பேசுவதும் எழுதுவதும் அதைவைத்து பலன்காண்பதும் பிரபலம் ஆகிவிட்டது.


இதற்கு நேர்மாறாக, 'மகிழ்வித்து மகிழ்' என்கிற வாசகத்தை சொல்லிலும் எழுத்திலும் விடாத ஆசிரியர் ஒருவர், தன் மரணம் வரை அதையே கடைபிடித்திருக்கிறார் என்பதை எப்படிச் சொல்ல?!

ஆம்! காஞ்சிபுரம் மாவட்டம், உமையாள்பரணச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஜெயா வெங்கட்டின் கடைசி சமூக ஊடகப் பதிவுகளுமே இதற்கு சாட்சி. நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு சுற்றுலாப் பேருந்தில் தன் பள்ளி மாணவர்களின் மகிழ்ச்சியான பொழுதை நேரலையாகப் பதிவு செய்திருந்தார்! அதற்கு முன்னர், காலை 9 மணி 8 நிமிடத்துக்கு சுற்றுலாப் பேருந்தில் மாணவர்கள் புறப்பட்டதை, அஜித்குமார் நடித்த 'வேதாளம்' படத்தின் "வீரவிநாயகா..வெற்றி விநாயகா..வரலாற்றில் முதல் சந்தோஷத்தை எங்கள் மாணவர்களுக்கு.." என்று குறிப்பிட்டிருந்தது, அவரின் முகநூல் பதிவு.
வாட்சப்பில் உள்ள நிலைத்தகவலையும் விட்டுவைக்கவில்லை, வெங்கட்டின் மகிழ்விக்கும் மகிழ்ச்சியுணர்வு. " மகிழ்வாய் மெட்ராசை சுத்திப்பார்க்கப் போறோம்... எங்க பள்ளி சிட்டுக்குருவிகளோடு... மெரினாவுக்கு 'ஹாய்' சொல்லப் போறோம்" என்பதுதான் அவரின் வாட்சப் நிலைத்தகவல்!
'மகிழ்வித்து மகிழ்' எனும் முழக்கத்தை உயிர்ப்போடு வைத்திருந்த 'சென்னை சிறுதுளி' ஆசிரியர் ஜெயா வெங்கட், தன் பள்ளி மாணவர்களின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றான சென்னைச் சுற்றுலாவை நிஜமாக்கி, அவர்களுடன் சென்னைக்குள் நுழையும்போதுதான் அந்த விபரீதமும் நிகழ்ந்தது!
சென்னையின் நுழைவுவாயிலைத் தாண்டி, முதலில் பெரியார் கோளரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, கிண்டியைத் தொட்டிருந்தது. பேருந்துக்குள் உற்சாகமாய் பாடியும் சத்தமிட்டும்கொண்டும் இருந்த மாணவர்களுடன், வெங்கட்டும் ஆசிரியராகவும் மாணவராகவும் அவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ந்துகொண்டிருந்தார். நின்றுகொண்டிருந்த அவர், திடீரென தடாலென தலைகுப்புற கீழே விழுந்தார். அவசரமாகப் பேருந்தைத் திருப்பமுடியாத இடத்தில், ஆட்டோவை வைத்து மடுவன்கரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உயிர் முன்னமே பிரிந்துவிட்டதை மருத்துவர்கள் சொல்ல, உடன்வந்தவர்கள் மொத்தமாக 'ஓ'வெனக் கதற... அந்த இடமே அந்த நேரம், படுகோரமாக இருந்தது!
மருத்துவமனை வழக்கங்களுக்குப் பின்னர், வெங்கட்டின் வீடு இருக்கும், சென்னை, ஆழ்வார்திருநகரில் இறுதி மரியாதைக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டது. தமிழகத்தின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் ஆசிரியர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் திரண்டுவந்து, தங்களை மகிழ்வித்த ஆசிரியருக்கு, துயரமான மரியாதையை இறுதியாகச் செலுத்திவிட்டுச் சென்றார்கள்.
அஞ்சலியில் கலந்துகொண்ட 'அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமா மகேசுவரியிடம் பேசியபோது, ஆதங்கத்தையும் வருத்தத்தையும் கொட்டினார்.
" 'அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்' எனும் இயக்கத்தின் மூலமாக ஆசிரியர் நண்பர்கள் பலரும் ஆரோக்கியமான கல்விச் சூழலைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். அதன் ஒரு பகுதியாக வெங்கட் இயங்கினார் என்றாலும், அதற்கு முன்பே, அரசுசாரா அமைப்பு ஒன்றின் விருதாளராகத்தான் எனக்கு அறிமுகம் ஆனார். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கல்விவசதிக்காக ஏராளமானவர்களுக்கு 'சென்னை சிறுதுளி' என்ற பெயரில் நிறைய உதவிகளை அவர் செய்துவந்துள்ளார். உதவி தேவைப்படுகிறவர்களுக்கு ஓடிஓடி உதவுவது என குறிப்பிட்ட சிலரை நாம் பார்க்கமுடியும்தானே.. அப்படிப்பட்ட ஒருவர்தான் வெங்கட். எங்களின் 'அஅஅ' இயக்கத்தின் தொடர்புக்குப் பிறகு, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்காகவே அதிக உதவிகளைச் செய்திருக்கிறார்.
50, 60, 100.. இப்படி எத்தனை குழந்தைகளுக்கு நோட்டுகள் தேவையா, புத்தகங்கள் தேவையா, அடையாள அட்டைகள் தயாரிக்கவேண்டுமா, அகராதி நூல்கள் வேண்டுமா, எழுதுபொருள் பெட்டிகள் தேவையா எதுவானாலும் உரிய கொடையாளர்களைப் பிடித்து, முறையாக அதை வாங்கி, உரிய பள்ளிகளுக்கு அனுப்பிவைத்து, அது போய்ச்செர்ந்துவிட்டதா என்பதையும் கவனமாக உறுதிசெய்தபிறகுதான் அவர் மூச்சுவிடுவார்போல... அந்த அளவுக்கு, உதவிசெய்வதில் அந்தத் தம்பியைப் போல இருப்பவர்கள் ரொம்பவும் குறைவுதான்..! அவருக்கு இறுதிமரியாதை செலுத்த வேலூர், தருமபுரி, விருதுநகர் என பல திசைகளிலிருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நலத்தோடு இருக்கவேண்டியவர்கள்... இதற்கும் எத்தனையோ முறை ரத்ததானம் பற்றி எல்லாம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியவர்... நேற்றிருந்தவர் இன்று இல்லை என்பதை மனம் ஏற்கவே மறுக்கிறது.." எனச் சன்னமான குரலில் சொல்லி முடித்தார், ஆசிரியர் உமா மகேசுவரி.
" கடைசியாக செஞ்சியில் உள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு வேண்டிய உதவிப்பொருள்களைப் பெற்று அனுப்பினார், வெங்கட்; அந்த மாணவர்கள் எல்லாரும் அந்தப் பொருள்களுடனேயே திரும்பிவந்துவிட்டார்கள்; தங்களுக்கு உதவிய வெங்கட்டின் உயிரே போய்விட்டதே..' என நம்மிடம் சொன்ன தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் தியாகராஜன்,
"இப்படி இளம் வயதில் உயிரிழக்கும் ஆசிரியர்களுக்கு முன்பு இருந்த ஓய்வூதியம் இப்போது இல்லை; அவர்களின் குடும்பம் பொருளாதாரப் பாதுகாப்பில்லாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறது. 'மகிழ்வித்து மகிழ்' என வாழ்ந்தவனின் குடும்பத்துக்கு இதுதான் கதி!" என இளம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் முக்கியப் பிரச்னையையும் சுட்டிக்காட்டினார், பொருத்தமான சமயத்தில்!
தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது, 7 வயது குழந்தைகளை 'விட்டுவிட்டுச்' சென்ற ஆசிரியர் வெங்கட்டின் வாழ்வைப் போல இனி யாருக்கும் அமைந்துவிடக்கூடாது என்பதே சக ஆசிரியர்களின் ஆதங்கமாக இருக்கிறது.




7 Comments:

  1. May his soul rest in peace.
    May God console the bereaved family

    ReplyDelete
  2. plaese all teachers please listen .............do the exercise by walking walking walking

    ReplyDelete
  3. ஆசிரியரின் ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. Rip எனது அருமை தோழரே உனது ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டுகிறேன் மிகுந்த வருத்தத்தோடு

    ReplyDelete
  5. நல்லவர்களைத்தான் ஆண்டவன் நிறைய சோதிப்பார்

    ReplyDelete
  6. Very sad May rest his soul at heaven

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive