நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவுகள் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் தொடங்கின. சிபிஎஸ்இ வாரியத்தின் அறிவிப்பின்படி மார்ச் 9-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கானக் கட்டணத்தை 10-ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்குள் இணையவழியில் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகள், பயிற்சி மையங்கள் மற்றும் தங்களது பெற்றோர்களின் உதவியுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களில் ஒருவர் கூட இதுவரை விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் ஒருவர் கூட விண்ணப்பிக்காத நிலையே காணப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கென அரசு சார்பில் இலவச பயிற்சி மையங்கள், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு பள்ளிகளிலேயே வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தந்த பிறகும் மாணவர்கள் விண்ணப்பிக்காமல் இருப்பது ஏன்? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து அரக்கோணம் அருகே உள்ள நாகவேடு அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவரை கேட்டபோது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ. 1,400 கட்டணம் செலுத்த வேண்டும். இப்பணத்தைத் தரும் அளவுக்கு பெற்றோர் வசதியானவர்கள் இல்லை. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 750 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதைக் கூட செலுத்த வசதியில்லாத நிலையில் தான் பெற்றோர்கள் உள்ளனர்.
கடன் பெற்று செலுத்தினால், பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளி, எங்கள் பள்ளியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. தினமும் சென்று வருவது சிரமமாக உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றார்.
கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக வர வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும் மாணவர்கள் தெரிவித்துள்ள சிரமங்கள் குறித்து கல்வித் துறையினர் ஆலோசனை செய்ய வேண்டும். நோட்டுப் புத்தகங்களில் இருந்து மடிக்கணினி வரை இலவசமாக தரும் தமிழக அரசு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்வரும் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தை அரசே ஏற்க முன்வர வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்வருவர்கள் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...