பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழக அரசு மறுதேர்வு நடத்தாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள் கிழமை)வெளியிட்ட அறிக்கையில்,“தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், அதை மீறி அப்பணிகளுக்கு மீண்டும் போட்டித்தேர்வு நடத்த அரசு தயாராகி வருகிறது. நேர்மையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோரின் நலனுக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது.பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், அதற்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி முதலிலேயே வலியுறுத்தியது. அடுத்த சில நாட்களிலேயே இத்தேர்வில் நடந்த முறைகேடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுபிடித்துவிட்டது.
ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 1.33 லட்சம் மாணவர்களில் 196 மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டுமே திருத்தப்பட்டிருந்தன. இதைத்தவிர வேறு முறைகேடுகள் நடக்காத நிலையில், மோசடி செய்தவர்களை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, தகுதியானவர்களை நியமிப்பதுதான் நியதி. ஆனால், ஒட்டுமொத்த தேர்வையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துவிட்டது.இது முறையல்ல என்றும், அனைத்து விடைத் தாள்களையும் 12 வாரங்களில் மறு மதிப்பீடு செய்து அதனடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பின் 25 நாட்களாகிவிட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை.
மாறாக, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அடுத்த சில வாரங்களில் இதற்கான அறிவிக்கையை தேர்வு வாரியம் வெளியிட உள்ளது. விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றுஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
இது தகுதியான மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ததையோ, மீண்டும் அத்தேர்வுகளை நடத்தப் போவதையோ ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. போட்டித் தேர்வுகளில் அனைத்து நிலைகளிலும் முறைகேடு நடந்திருந்தால் மட்டும்தான் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய முடியும்.மாறாக, ஏதேனும் ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் முறைகேடு நடந்திருந்தாலோ அல்லது முறைகேடு செய்தவர்களையும், அவ்வாறு செய்யாதவர்களையும் பிரித்துப் பார்க்க முடியும் என்றாலோ தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை என்று பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனடிப்படையில்தான் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று சென்னைஉயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது.
விரிவுரையாளர் தேர்வைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக காப்பியடிப்பதோ அல்லது வேறு வகையில் முறைகேடு செய்வதோ நடக்கவில்லை. விடைத்தாள்களும் மாற்றப்படவில்லை. விடைத்தாள்கள் எந்த வகையிலும் சேதப்படுத்தப்படவில்லை. அவை இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களை திருத்துவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்றால் அதுவும் இல்லை.அனைத்து விடைத்தாள்களும் முறையாக திருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்களை பட்டியலிடும் போது 196 மாணவர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, கணிதப் பாடப்பிரிவில் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவர் 115 மதிப்பெண் எடுத்ததாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தரவரிசையில் ஆயிரம் இடங்களுக்கும் கீழ் இருந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வரப்பட்டனர்.மதிப்பெண் உயர்த்தப்பட்ட 196 பேர் யார் என்பதும் அடையாளம் கண்டறியப்பட்டுவிட்டது. அவ்வாறு இருக்கும்போது அந்த 196 பேரை நீக்கி விட்டு, மீதமுள்ளவர்களைக் கொண்டு தரவரிசை தயாரித்து அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவது தான் நியாயமானதாகும். அதைத்தான் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் கூறியுள்ளன.இதை செய்வதற்கு பதிலாக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்தால், இத்தேர்வுக்காகஇரவு பகலாக படித்து நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவர். இது நேர்மையை தண்டித்ததாக அமைந்து விடும். இப்படி ஓர் அநீதிக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது.
எனவே, பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற வேண்டும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டவாறு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து புதிய தரவரிசைப் பட்டியல் தயாரித்து, அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வர வேண்டும்”என அந்த அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...