தனித்தேர்வர்களும் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான நீட் தேர்வு மே மாதம் 6 -ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநர் ஓர் அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ' நீட் தேர்வில் தனித்தேர்வர்களும் பங்கேற்கலாம் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமுள்ள திறந்தநிலை பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் நிகழாண்டு முதல் நீட் தேர்வில் பங்கேற்கலாம்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 30 வயதுக்குக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், உயிரியலை கூடுதல் பாடமாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள், அன்ரிசர்வ்டு பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கும் மேற்பட்டோர் ஆகியோரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிடப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்தோர் இணையதளத்தில் நீட் தேர்வுக்கு தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வு குறித்த பிற விதிமுறைகள் யாவும் இவர்களுக்கும் பொருந்தும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 9 -ஆம் தேதியாகும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மார்ச் 12 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...