போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்பட்ட அபராத கட்டணத்தை,
'இ - சலான்' மூலம் தபால் அலுவலகங்களில் செலுத்தும் புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களை வேகமாக ஓட்டுதல், 'ஸ்டாப் லைன்' தாண்டி நிறுத்துதல், மொபைல்போன் பேசியபடி ஓட்டுதல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்களுக்காக, போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான அபராத கட்டணத்தை, 'இ - சலான்' மூலம், அருகிலுள்ள தபால் நிலையங்களில் செலுத்தும் புதிய திட்டத்தை, போக்குவரத்து காவல்துறை மற்றும் தபால்துறை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தவும் தபால்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கோவை கோட்ட தபால்துறை முதுநிலைக்கண்காணிப்பாளர், சித்ராதேவி கூறியதாவது: விதிமுறைகளை மீறுவோரிடம், போக்குவரத்து போலீசார், இ - சலான் அளிப்பர். அதில், இ - சலான் நம்பர், பெயர், வாகன எண், லைசென்ஸ் எண் உள்ளிட்ட, தகவல்கள் இருக்கும். சம்பந்தப்பட்ட நபர், அருகிலுள்ள தபால்நிலையத்தில், சலானில் குறிப்பிட்ட அபராத கட்டணத்தை செலுத்தலாம்.
அபராத கட்டணம், 1,000 ரூபாய்க்குள் எனில், கூடுதலாக ஐந்து ரூபாயை, தபால்துறை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவே, 1,001 - 2,500 ரூபாய் எனில், 10 ரூபாய்; 2,500 - 5,000 ரூபாய் எனில், 15; 5,000 ரூபாய்க்கு மேல் எனில், 20 ரூபாய் வசூலிக்கப்படும். கோவையில் போக்குவரத்து போலீசுக்கு பயனர் ஐ.டி., உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...