குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்
பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர் பாக்யராஜ் கூறியதாகத் தகவல் வெளியானது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த 12 பேர்,சென்னையை சேர்ந்த 24பேர் என மொத்தம் 36 பேர் கொண்ட குழு ஒன்று போடி அருகே குரங்கணி, கொலுக்கு மலைப்பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இந்த மலைக்குச் சூரியநல்லி வழியாகத்தான் செல்ல முடியும். ஆனால், இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 8 ஆண்கள்,26 பெண்கள்,3 குழந்தைகள் அடங்குவர்.அதிகமானவர்கள் சென்னையைச் சேர்ந்த தனியார் மென்பொருள் ஐடி ஊழியர்கள்.
இவர்கள் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட தீ, மாலையில் அதிவேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் மலைக்குச் சென்றவர்கள் திரும்ப முடியாமல் தீயில் சிக்கியுள்ளனர். 10 பேர் கடுமையான தீக்காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து மற்றவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுத் தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காட்டுத் தீயில் சிக்கியவர்கள் பற்றி தகவல் கிடைத்ததும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
முதற்கட்டமாகக் காட்டுத்தீயில் சிக்கிய 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர் (29), சாதனா (11), பாவனா (12), ஈரோட்டைச் சேர்ந்த நேகா (9), சென்னையைச் சேர்ந்த பூஜா (27), சஹானா (20), மோனிஷா (30), நிவேதிதா (23), விஜயலட்சுமி (22) ஆகிய ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.அதிகாலையில் ராணுவ கமோண்டோக்கள் 16 பேர் வனப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில் தீயில் சிக்கிய பெண்கள், ஒரு சிறுவன் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாக்யராஜ் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரப் பூர்வ தகவல் வராத நிலையில் அனைத்துத் தரப்பிலிருந்தும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த இரு நாள்களாகக் காட்டுத் தீ எரிந்து வருவதாகவும், அவ்வாறான நிலையில் வனத்துறையினர் மலையேற ஏன் அனுமதித்தார்கள் என்று உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கோடைக்காலத்தில்தான் இதுபோன்று காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால், கோடைக்காலம் தொடங்கும் முன்னரே தீப்பிடித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மலையில் அதிகரிக்கும் புற்களுக்கு மலைப்பகுதி மக்கள் தீ வைப்பார்கள். அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வனத்துறை ஊழியர்கள் சிலரின் உதவியால் மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கும் நிலையில் அதிகாரிகள் சர்வே எடுக்க வருவார்கள். வெட்டப்பட்ட மரங்களை அழிப்பதற்காகத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
மற்றொருபக்கம் மலைக்குச் சென்றவர்கள் கேம்ப் ஃபயர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, பிறகு தீயை அணைக்காததால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எனினும் உறுதியான காரணம் தற்போதுவரை வெளியாகவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...