ஒரு குழந்தை 12 வயதுக்குள் உண்ணும் உணவுதான் அவர்களின் வளர்ச்சியையும்,
ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது என்று சொல்வார்கள். ஓடி ஆடி விளையாடும்
சின்னஞ்சிறிய வயதில் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள்
தருவது அவசியமாகிறது.
என்னதான் வீட்டில் பார்த்து பார்த்து செய்து
கொடுத்தாலும் குழந்தைகள் வெளியிடங்களில் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.
சத்தான உணவுகளை ஒதுக்கி விட்டு சுவையான உணவுகளையே குழந்தைகள்
தேர்ந்தெடுக்கிறார்கள். முக்கியமாக வீட்டில் கொடுத்தனுப்பும் உணவுகளை விட,
பள்ளியின் கேன்டீனில் விற்கப்படும் உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். ஆக
பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் இடமாக
கேன்டீன்கள் இருக்கின்றன. அங்கு விற்கப்படும் உணவுகளை பெற்றோர்கள்
கண்காணித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஏற்கனவே
தயாரித்து பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளே அங்கும் கிடைக்கிறது
என்பதே உண்மை.
முன்பெல்லாம் பள்ளிக்கூட வாசல்களில் விற்கப்பட்டு வந்த தின்பண்டங்கள்
இப்போது கேன்டீன்களில் கிடைப்பதில்லை. சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள்
மட்டுமே கொள்ளை விலையில் விற்கப்படுகிறது. இதுவே உடல்நலனுக்கு தீங்கும்
விளைவிக்கிறது. கொய்யாப்பழம், நெல்லிக்காய், சாத்துக்குடி, நாவல்பழம்,
வெள்ளரி, மாங்காய் போன்ற காய்கனிகளும் அவித்த புட்டு, பயறு வகைகள்,
பணியாரம், கிழங்குகள் போன்றவைகள் பள்ளிக்கூட கேன்டீன்களில் விற்கப்பட
வேண்டும். அவை சுத்தமாக பள்ளிக்குழந்தைகளுக்கு விற்கப்படவேண்டும் என்று
பள்ளிக்கூட நிர்வாகம் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். சுத்தமான
போஷாக்குள்ள உணவே குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவும் என்பது
உண்மையானால் இந்த விஷயத்தில் பள்ளியும் பெற்றோர்களும் இணைந்து செயல்பட
வேண்டும். தரமில்லாத உணவை குழந்தைகளுக்கு தராமல் நமது பாரம்பர்ய உணவுகளை
அளிக்க வழிவகைச் செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...