அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும்
பணிகளும், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கும் பணிகளும் விரைவில்
தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை ராணிமேரி கல்லூரியின் நூறாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை
நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கிய
அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்கள் காரணமாக, இன்றைக்கு உயர்
கல்வியில் தமிழகம் நாடளவில் முன்னிலை பெற்றுள்ளது. அதுபோல், பெண்கள்
முன்னேற்றத்துக்கும், பெண் கல்வி மேம்பாட்டுக்கும் பல்வேறு திட்டங்களை அவர்
வகுத்துள்ளார். இத்தகைய திட்டங்கள் காரணமாக ஒட்டுமொத்த உயர் கல்விச்
சேர்க்கையில் (ஜி.இ.ஆர்.) தமிழகம் இந்திய அளவில் முதல் மாநிலமாகத்
திகழ்கிறது என்றார்.
ரூ.210 கோடி ஒதுக்கீடு: பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
தமிழகத்திலுள்ள அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் உள்கட்டமைப்பு
வசதிகளுக்காக ரூ. 210 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம்
ஒவ்வொரு கல்லூரிக்கும் வகுப்பறைகள் உள்ளிட்ட பிற வசதிகளைச் செய்து
தருவதற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்க
உள்ளன.
எனவே, ராணிமேரி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழா
அரங்கும் இந்தத் திட்டத்தின் கீழ் பழுது நீக்கம் செய்யப்படும் என்றார்
அவர்.
முன்னதாக விழாவில் ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ச.சாந்தி வாசித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 1,854 மாணவியர் பட்டச் சான்றிதழ்களைப் பெற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...