தமிழக அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியலை
தனிப் பாடமாக வழங்கி, மாணவர்களின் கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவை
மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் போதிய கணினிகளும், கணினி அறிவியல்
பாடத்திட்டங்களும் செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் கணினி அறிவு
பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது வரை மேல்நிலை வகுப்புகளில் மட்டுமே
கணினி அறிவியல் தனி பாடத் திட்டமாக தொடர்கிறது.
தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல்
பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் இந்த வாய்ப்பு
கிடைக்காமல் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கல்வித் துறை
அறிக்கையில் மட்டும் ஆண்டுதோறும் கணினி பாடம் இருந்து வரும் நிலையில்,
அரசுப் பள்ளியில் இல்லாத நிலை தொடர்வதாக கல்வியாளர்கள் அதிருப்தி
தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது வரவேற்புக்குரிய திட்டமாக இருந்த
போதிலும், அதன் வாயிலாக மாணவர்களுக்கு முறையான கணினி கல்வியை வழங்க
வழியில்லாத நிலை உள்ளது என்பதுதான் நிதர்சனம். கடந்த 2011 }முதல் தற்போது
வரை பல லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,
பள்ளி ஆய்வகங்களில் பயிற்சிக்கான கணினிகள் இல்லாத நிலை உள்ளது.
கணினிப் பாடத்தில் பின்தங்கிய நிலை: மத்திய அரசின் தகவலின்படி, தமிழக
அரசுப் பள்ளிகளில் 36.72 சதவீதம் கணினிகள்தான் உள்ளனவாம். தமிழகத்தில்
தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை 50 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ளன.
இவற்றுக்கு, தலா 10 கணினிகளை வழங்கி ஆய்வகம் அமைத்திருந்தாலே ஓராண்டில்
அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் கணினிமயமான பள்ளிகளாக மாறியிருக்கும். புதுவை
அரசுப் பள்ளிகளில் 99.74 சதவீதம் கணினிகளை அமைத்துள்ளனர். கேரளமும் கணினி
வழி கல்விவை மேம்படுத்தி முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி கடந்த 2011-12ஆம் ஆண்டில் அறிமுகமானது. அதில் 6
முதல் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு
வந்தனர். ஆனால், அதையும் கிடப்பில் போட்டதோடு, அதற்காக அச்சிடப்பட்ட 50
லட்சம் புத்தகங்களையும் முடக்கி வீணாக்கிவிட்டனர்.
கடந்த 2016-2017ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட கல்வி அறிக்கையில்,
இந்தியாவில் சராசரியாக 22 சதவீத குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவர் கணினிக்
கல்வி பயின்றவராக உள்ளனர். இது கேரளத்தில் 49 சதவீதமும், பஞ்சாப், சிக்கிம்
மாநிலங்களில் 47, 43 சதவீதம் என்றளவில் உள்ளன. கேரள அரசுப் பள்ளியில் 70
சதவீதம் கணினிகள் உள்ளதாக நிகழாண்டு தகவல் தெரிவிக்கிறது. அங்கு பத்தாம்
வகுப்பில் தேர்ச்சி பெற மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திலும்
தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அவர்களுக்கு முன்னோடியாக கடந்த 2011-ஆம் ஆண்டே அரசுப்
பள்ளிகளில் கணினிக் கல்வி தொடங்கப்பட்டது. ஆனால் அதனை செயல்படுத்தாத
நிலையில், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக அரசு பள்ளிகளில் கணினி
அறிவியல் கட்டாயப் பாடமாகி முன்னேறி வருகிறது.
புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்: தனியார் பள்ளிகளில்
பத்தாண்டுகளுக்கு முன்பே கணினி அறிவியல் பாடத்தை முதலாம் வகுப்பிலிருந்தே
கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் ஐந்து பாடங்களுடன்,
கணினி அறிவியல் பாடத்தை மேல்நிலை வகுப்புகளில்தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
கணினி அறிவியல் பாடத்தை 3 - ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை
பாடத்தில் சேர்ப்பதற்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே
தெரிவித்திருந்தனர். ஆனால், புதிய பாடத்திட்டத்திலும் இந்த அறிவிப்பு
செயல்படுத்தப்படவில்லை. 2018-19ஆம் கல்வியாண்டில், 6 -ஆம் வகுப்பு மற்றும் 9
-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
இதில் அறிவியல் பாடத்தின் இணைப்புப் பாடமாக மட்டுமே கணினி அறிவியலை சேர்க்க
உள்ளனர். எதிர்பார்த்ததைப் போல் ஆறாவது பாடமாக கொண்டுவரவில்லை. இதற்கான
செய்முறை பயிற்சியும், தனி ஆசிரியர்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தாமல் கணினி
கல்வி மேம்பாட்டை எதிர்பார்க்க முடியாது.
அரசுப் பள்ளிகளில் போதிய கணினி வசதியை ஏற்படுத்தி, கணினி அறிவியலை
தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும், மேல்நிலைப் பாடத்திட்டத்தில் மட்டும் உள்ள
கணினி அறிவியல் பாடமும், நீண்டகாலத்தையதாக உள்ளது. இதனையும் மாற்றி
மேம்படுத்த வேண்டும். கணினி ஆசிரியர்கள் 1,850 பேர் மட்டுமே ஆரம்ப
காலத்தில் நியமிக்கப்பட்டனர். 725 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்ற
கடந்தாண்டு அறிவிப்பும் கிடப்பில் தான் உள்ளது.
இதனால் உரிய தேர்வை நடத்தி கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பணி
வாய்ப்புக்காக போராடி வரும் 40 ஆயிரம் கணினி அறிவியல் ஆசிரியர்களும்
காத்துள்ளனர். இது தொடர்பாக, கல்வித்துறையும், அரசும் விரைந்து நடவடிக்கை
எடுத்து கணினி சார்ந்த கல்வியை ஆரம்பக் கல்வி நிலையிலேயே மேம்படுத்த
வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-இல.அன்பரசு
Ya absolutely true. But no steps regarding this subject as well as B.Ed CS graduates.
ReplyDelete