எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மார்ச் 9) கடைசியாகும்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே மாதம் 6-ஆம்
தேதி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சுமார் 11 லட்சம் பேர் நாடு முழுவதும்
இந்தத் தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர்
தேர்வு எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில்
விண்ணப்பங்களைச் செலுத்துவதற்கு மார்ச் 9-ஆம் தேதி (இரவு 11.50 மணிக்குள்)
கடைசியாகும். தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைனில் மார்ச் 10-ஆம் தேதி (இரவு
11.50 மணிக்குள்) செலுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம்
ரூ.1,400 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கான கட்டணம் ரூ.750 ஆகும்.
விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் மார்ச் 12-ஆம் தேதி முதல்
16-ஆம் தேதி வரை இணையதளத்திலேயே அதனைத் திருத்திக் கொள்ளலாம். மே மாதம்
6-ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூன் 5-ஆம் தேதி தேர்வு முடிவுகள்
வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...