தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
* டாக்டர்களின் எண்ணிக்கையை மேலும்
உயர்த்தும் நோக்கத்துடன், வரும் ஆண்டுகளில், திருநெல்வேலி, மதுரை,
கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
மருத்துவப் பட்டப்படிப்புக்கான 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும்.
* 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத்
திட்ட மதிப்பீடுகளில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்திற்காக ரூ.1,361.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைகளுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் ரூ.66.50 கோடி செலவில் 2
நேரியல் முடுக்கிகளும், 6 சி.டி. ஸ்கேன்களும், 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களும்
வழங்கப்படும். ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்
பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும். விழுப்புரம்,
தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைகளில், ரூ.34 கோடி செலவில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய
கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும். 10 அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைகளில் தற்போதுள்ள கோபால்ட் அலகுகள் ரூ.35 கோடி செலவில்
மாற்றியமைக்கப்படும்.
சென்னை, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம்.
மருத்துவமனையிலும், திருவாரூர், கன்னியாகுமரி மற்றும் தேனி மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும்
பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் ரூ.48 கோடி செலவில் தரம்
உயர்த்தப்படும். விருதுநகர், காஞ்சீபுரம், திருப்பத்தூர் மற்றும்
ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டத் தலைமையிட மருத்துவமனைகளில், ரூ.80 கோடி
செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகள் தொடங்கப்படும்.
விழுப்புரம், தர்மபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மற்றும்
திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்
ஏழை மக்களுக்கு இதயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான நோய்களுக்கான
மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் ரூ.21 கோடி செலவில் மேலும் 6 ‘கேத்’
ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், தேசிய சுகாதார இயக்கத்திற்காக ரூ.1,551.22 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
* கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவலாக உள்ள ரத்த
சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இத்திட்ட
நிதியில் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இரும்புச்சத்து டானிக் மற்றும்
ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்துப் பெட்டகம்
வழங்கப்படும். 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட
மதிப்பீடுகளில், இந்த முன்னோடித் திட்டத்திற்காக ரூ.1,001.33 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சுகாதாரத் துறைக்காக ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...