மதுரையில் ப்ளஸ் 2 தேர்வெழுதச் சென்ற மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அர்ஜுன் (18) என்ற மாணவர் வணிகவியல் பிரிவில் பிளஸ் 2 படித்துவருகிறார். தற்போது பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றதால், தேர்வெழுத அர்ஜுன் பள்ளிக்குச் சென்றுள்ளார். தேர்வு நடக்கும் முன்பாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தார். அப்போது சக மாணவர்களான சுண்ணாம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் அர்ஜுனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜுனைக் குத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அர்ஜுனின் கைவிரல் துண்டானது. தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கார்த்திக் ராஜா மற்றும் சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, அர்ஜுன் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ஜுன் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா, சரவணக்குமார் இருவரும் தலைமறைவாகியுள்ளதால் அவர்களைத் தேடிவருகின்றனர்.
அர்ஜுனின் தந்தை பெயர் மாயக்காளை. தாயார் தீபா. இவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். அர்ஜுன் தினமும் முகாமிலிருந்து பள்ளிக்குச் சென்றுவந்துள்ளார். மாணவர்களுக்கிடையே பல மாதங்களாக வகுப்பறையில் பெஞ்சில் யார் அமர்வது என்ற போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆசிரியரின் துன்புறுத்தலால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும், கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் கொலை செய்வதும், மாணவர்கள் வகுப்பறையிலேயே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துவருகின்றன.
கடந்த ஜனவரி மாதம், நாகையில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்கள் சந்தோஷ்குமார் மற்றும் கோகுல் இடையே தகராறு ஏற்பட்டதில், மாணவர் சந்தோஷ்குமார் சக மாணவரான கோகுலைக் கத்தியால் குத்தினார். காயமடைந்த கோகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
These things are happening due to,there is no freedom for teachers over students.
ReplyDelete