மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்-2 பொதுத் தேர்வில்
பொருளியல் (எகனாமிக்ஸ்) வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில்
திங்கள்கிழமை தகவல்கள் பரவின.
இதனால், அந்தத் தேர்வினை எழுதிய
லட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர்.
ஆனால், வினாத்தாள் கசிந்த விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள சிபிஎஸ்இ
வாரியம், இதுதொடர்பாக மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று
விளக்கமளித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கணக்குப் பதிவியல்
(அக்கவுண்ட்டன்சி) தேர்விலும் வினாத் தாள் கசிந்ததாகச் சர்ச்சைகள் எழுந்தது
குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. ஏப்ரல்
13-ஆம் தேதி வரை அத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், பொருளியில்
பாடத்துக்கான தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 26) நடைபெற்றது. ஆனால், தேர்வு
தொடங்குவதற்கு முன்னரே அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டதாக வாட்ஸ்-அப்
உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், அந்தத் தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது மறுதேர்வு நடத்தப்படுமா?
என்ற குழப்பம் மாணவர்களிடையே எழுந்தது. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள
சிபிஎஸ்இ வாரியம், வினாத்தாள் கசிந்ததாக பரவிய தகவல் முற்றிலும் தவறானவை
எனக் கூறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு
நடத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை எனவும்
அந்த வாரியம் விளக்கமளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...