தமிழகம், புதுச்சேரியில், 8.67 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, பிளஸ் 2
பொது தேர்வு, நேற்று துவங்கியது. ஏப்., 6 வரை நடக்கும் இத்தேர்வு
முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படுகின்றன.
மொத்தம், 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவர்களுடன்,
40 ஆயிரம் தனித்தேர்வர்களும், தேர்வு எழுதுகின்றனர். நேற்று காலையில்,
தேர்வுகள் துவங்கும் முன், பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன.
இதில், தேர்வு சுமூகமாக நடக்கவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம்
அதிகரிக்கவும், மாணவர்கள் பிரார்த்தித்தனர். பல பள்ளிகளில் மாணவர்களுக்கு,
ரோஜா பூக்களும், சாக்லேட் போன்ற இனிப்பும் வழங்கி, ஆசிரியர்கள் வாழ்த்தி
அனுப்பினர். மாணவர்களின் பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து, ஆசி
வழங்கி, தேர்வு மையத்துக்கு அனுப்பினர். தேர்வின் முதல் நாள் என்பதால்,
பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ்,
பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் ஆகியோர், பள்ளிகளுக்கு நேரில் சென்று,
ஏற்பாடுகளை பார்வையிட்டனர். சென்னை, கடற்கரை சாலையில் உள்ள, லேடி வெலிங்டன்
பெண்கள் மேல்நிலை பள்ளியை பார்வையிட்ட, அமைச்சர் செங்கோட்டையன்,
மாணவியரிடம், ''பதற்றப்படாமல், பயமின்றி எழுதுங்கள்; 100க்கு, 100
மதிப்பெண் பெறலாம்,'' என, வாழ்த்தினார். கேமரா வெளிச்சம் இல்லை : வழக்கமாக,
தேர்வு துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள், தேர்வறைகளுக்கு செல்வர். அவர்களுடன், தொலைக்காட்சி ஊடகங்களும்,
பத்திரிகை புகைப்படக்காரர்களும் செல்வர். கேமரா ஒளிவெள்ளத்தில்,
படப்பிடிப்பு தளம் போல, தேர்வறை காணப்படும். அதற்கிடையில், அமைச்சர் பேட்டி
என, அரசியல் களை கட்டும். கடந்த ஆண்டு, சென்னை, எழும்பூர் அரசு மகளிர்
பள்ளியில், அமைச்சரின் வருகையின்போது, தேர்வறைகளில் மாணவியரின், 'பெஞ்ச்,
டெஸ்க்'களில் ஏறி, படம் எடுத்ததால், மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இது,
சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு, தேர்வு துவங்குவதற்கு, ஒரு மணி நேரம்
முன், அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு மையத்திற்கு வந்து, மாணவியரை
வாழ்த்தினார். மேலும், இரண்டு நிமிடங்களில், அவர், தேர்வறையை விட்டு
வெளியேறினார். அதனால், மாணவியர் நிம்மதியாக தேர்வை எழுதினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...