சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்ட மேற்படிப்பு
மாணவர்களுக்கான பட்டமேற்படிப்பு முடித்ததற்கான
பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில்
நேற்று நடந்தது. பதிவாளர் ஆர்.சீனிவாசன் தலைமை
தாங்கி, மாணவர்களுடைய குறைகளை தீர்த்து
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.சீனிவாசன், கூடுதல்
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.டி.சந்தானகிருஷ்ணன்
மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம்
பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:-
நவீன யுகத்துக்கு ஏற்றார் போன்று பல்கலைக்கழகத்தில்
பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை எளிய முறையில்
கொண்டு செல்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை
2018-2019-ம் கல்வியாண்டு முதல் முழுமையாக அறிமுகப்படுத்த
திட்டமிட்டு உள்ளோம். குறிப்பாக தற்போது பாட திட்டங்கள்
அனைத்தும் அச்சடித்த புத்தகங்களாக மாணவர்களுக்கு
வழங்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல்
மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரி
மூலமும் பாடங்கள் வெளியிடப்படும்.
இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்
போதிப்பதுடன், பல்கலைக்கழக இணையதளம்
மூலமாக வெளியிடப்படும் பாடங்களை மாணவர்கள்
தங்களுடைய வீடுகளில் உள்ள கணினி, செல்போன்
மற்றும் டேப்-லெட் மூலமாகவும் எளிதாக படிக்க முடியும்.
பேராசிரியர்களுடன் நேரடி பேச்சு
அத்துடன் ‘ஸ்கைப்’ வசதி மூலம் பல்கலைக்கழக
ஆசிரியர்களிடம், மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே
பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து
கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட நாளில் பகல்
2 மணி முதல் 4 மணி வரை ஆசிரியர்கள் தயார் நிலையில்
இருப்பார்கள்.
மாணவர்கள் ‘ஸ்கைப்’ மூலம் பாடத்தில் உள்ள
சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும்
வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம்
அடுத்த தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதி
பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கூடுதல் பாடம் படிக்கும் வசதி
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தில் கூடுதலாக
பிற பாடங்களையும் சேர்த்து படிக்க விரும்பும் தேர்வு
சார்ந்த அமைப்பு (சாய்ஸ் பேஸ்ட்டு கிரெடிட் சிஸ்டம்)
என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பி.எஸ்சி.
பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிக்கும்
மாணவர்கள் பி.காம் பாடத்தில் கணக்குப்பதிவியலில்
உள்ள ஏதாவது ஒரு பாடத்தை கூடுதலாக படிக்க
விரும்பினால் அதனையும் சேர்த்து படிக்க முடியும்.
அவ்வாறு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு
முடித்து பட்டம் வழங்கும் போது 4 அல்லது 6 ‘கிரெடிட்’ என்ற பெயரில்
கூடுதலான மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவ்வாறு 3 ஆண்டுகளில் 140 ‘கிரெடிட்’
மதிப்பெண்கள் பெறும் பட்டதாரி படிப்பு மாணவர்களுக்கும் 91 ‘கிரெடிட்’
மதிப்பெண் பெறும் எம்.ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் கூடுதலாக பி.ஏ.,
மற்றும் எம்.ஏ. பட்டம் வழங்கப்படும். வரும் ஆண்டுகளில் பட்டப்படிப்புகளில்
இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.
அஞ்சல் வழி கல்வியில் மாற்றம்
அதேபோன்று அஞ்சல் வழி கல்வி முறையிலும் சில
மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. வேலை பார்த்துக் கொண்டே
அஞ்சல் வழி மூலம் கல்வி பயின்று வருபவர்கள், வேலையை துறந்துவிட்டு
கல்லூரியில் சேர்ந்து நேரடியாக (ரெகுலர்) வகுப்பில் சேர்ந்து படிக்கவும்,
நேரடியாக படித்து வருபவர்களுக்கு திடீரென்று வேலை கிடைத்து விட்டால்,
அவர்கள் அஞ்சல் வழியில் சேர்ந்து படிக்கவும் வசதி அளிக்கும் புதிய முறையும்
கொண்டு வரப்பட உள்ளது.
இந்ததிட்டம் மூலம் மாணவர்கள் கல்வியை
பாதியில் நிறுத்திவிட்டு செல்லும் முறை தவிர்க்கப்படும். இந்த
திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைக்கும். இந்த 3 திட்டங்களையும் 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல்
பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்
தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில்
முதன்முறையாக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...