புதுக்கோட்டை நகரில் உள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னையில் இயங்கும் களிமண் விரல்கள்-7 (Clay Fingers 7) என்ற குழுவினர்
இந்தப் பள்ளியில் கடந்த மூன்று நாள்களாக கலைப்பயிற்சி முகாம் ஒன்றை
நடத்தினார்கள். இந்த முகாம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் புது
உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நாட்களாக மாணவர்களிடையே அந்தக்
குழுவினர் பல்வேறு கலைகளைப் சொல்லிக்கொடுத்து மாணவர்களை புது
அனுபவத்துக்குள் அழைத்துச் சென்றனர். பாட்டு, நடனம், நாடகம் என மூன்று
நாட்களும் அந்தப் பள்ளி வளாகமே திருவிழா நடக்கும் இடமாக மாறிப்போனது.
அந்த மகிழ்வானத் தருணங்களை மாணவர்களும் மாணவிகளும் அவர்களின் வார்த்தைகளில்
நம்மிடம் விவரித்தபோது, அவர்களின் சந்தோசம் நம்மையும் தொற்றிக்கொண்டது.
அதுகுறித்து தெரிவித்த அவர்கள், 'இந்த மூணு நாள்களும் நாங்க ரொம்ப சந்தோஷமா
இருந்தோம். ஒரு விஷயத்த மத்தவுங்களுக்கு எப்படி ஆக்ஷனோட சொல்லறதுனு
எங்களுக்குப் பாடல்கள், நாடகங்கள் மூலமா இந்த அண்ணன்கள்
கத்துக்கொடுத்தாங்க" என்றான் ஏழாம் வகுப்புப் படிக்கும் வினோத்.
"வெறும் பாட்டு நடனம்னனு இல்லாம ஓரிகாமி பயிற்சி கொடுத்தாங்க. நாங்களே
காகிதத்தில பட்டாம்பூச்சி, தொப்பி, துப்பாக்கி எல்லாம் செஞ்சு, அதைத்
தொட்டுப் பார்த்தப்போ அவ்வளோ சந்தோஷமா இருந்துச்சு" என்றாள் ஆறாம்
வகுப்புப் படிக்கும் மாணவி நதியா.
"பேப்பர் வொர்க் மட்டுமா? எல்லோருக்கும் கையில களிமண் கொடுத்து எங்க
கற்பனையில தோணுனதைச் செய்யச் சொன்னாங்க. நாங்க உருவங்கள் செஞ்சதோட
மட்டுமில்லாம அதுல கிளிஞ்சல்கள் ஒட்டி அழகும் படுத்துனோம்.
அதேபோல, வரையுற பிரஷ்ஷை கையில கொடுத்து நல்ல அழுத்தமான காகிதத்தையும்
கொடுத்து எங்களை வரையச் சொல்லி உற்சாகப்படுத்துனாங்க. என் வாழ்க்கையில நான்
வரையுறது இதுதான் முதல் தடவை. எனக்கு மட்டும் இல்ல. எங்க எல்லாருக்குமே
இதுதான் முதல் அனுபவம். அதுலேயும் நாங்க வரைஞ்சதை அப்படியே கோடுகளாத்
தொட்டுப் பார்க்கும்போது எப்படி இருந்துச்சுத் தெரியுமா?' என்று
சிலிர்க்கிறான் ஆறாம் வகுப்பு மாணவன் ஹரிஹரன்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்கும் விசித்ரா நம்மிடம்
பேசும்போது, "வெறும் பாடப் புத்தகங்களைப் படித்து மனப்பாடம் செய்து
ஒப்பித்துக்கொண்டிருந்த எங்கள் மாணவர்களுக்கு இந்த மூன்று நாட்கள்
உண்மையிலேயே ஒரு புது அனுபவம்தான். அத்துடன் இந்த மாணவர்களுக்குக்
கற்பிக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கும் இது
புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையாக அமைந்தது. இதுபோன்ற பயிற்சிகளை
மாநிலத்திலுள்ள அனைத்துப் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளிலும், அரசு
நடத்த வேண்டும் என்றார். இவரும் பார்வைத்திறன் குறைவுடையவர் என்பது
குறிப்பிடத்தக்கது. விழா நடந்த நாட்களில் சப்-கலெட்டர் சரயு, புதுக்கோட்டை
நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி போன்றவர்கள் மாணவர்களை
உற்சாகப்படுத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...