பெரியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு நடந்தது
தொடர்பான வழக்கில், ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்ட, திறந்தநிலை
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன், சேலத்தில் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக
ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 2009-இல் விடைத்தாள் மதிப்பீடு
செய்வதில், முறைகேடு நடத்தி, மதிப்பெண்களை வழங்கியதாக பிரச்னை எழுந்தது.
இதுகுறித்து அப்போது தேர்வாணையராக இருந்த ஜெயக்குமார், பல்கலைக்கழக ஊழியர்
சிவகாமி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு
போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, பெரியார் பல்கலைக்கழக
வணிகவியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த ஜெயக்குமார், இவ் வழக்கு
நிலுவையில் இருந்ததால், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் பணி ஓய்வு பெறும்
நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே, இந்த வழக்கின் நிலை குறித்து ஆராய, தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் உயர்நிலை ஆய்வுக் குழு
அமைத்து தமிழக அரசின் உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து, சேலம் விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு திறந்த நிலைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில்,நடைபெற்ற விசாரணையில்
பங்கேற்க பல்கலைக்கழக ஊழியர்கள் 16 பேருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது. 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மீதமுள்ளவர்களிடம் சனிக்கிழமை விசாரணை நடைபெறுகிறது. உயர்நிலைக் குழு
அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை
எடுக்கும் எனத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...