சென்னை மாநகரப் பேருந்துகளில் இனி நடத்துநர்கள் சீட்டில் அமர்ந்துகொண்டு பயணச்சீட்டு வழங்க
கூடாது எனப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் பல வழித் தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, தினமும் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்படும் நஷ்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாநகரப் பேருந்துகளில் மட்டும்தான் நடத்துநர் இருக்கையில் அமர்ந்துகொண்டே பயணச்சீட்டு வழங்கும் நிலை உள்ளது. இதனால் இலவச பயணம் அதிகரித்து, போக்குவரத்துக் கழகத்துக்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி, போக்குவரத்துக் கழகத்தின் வருவாயைப் பெருக்க தற்போது சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது, நடத்துநர் இருக்கையை விட்டு எழுந்து சென்று பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்க வேண்டும், பயணிகளிடம் இலவச பாஸ், மாதாந்திர பாஸ் போன்றவற்றை சோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து புகார் குறித்து பயணிகள் 9445030516 என்ற எண்ணில் புகார்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் புகார் தெரிவிக்கையில் பேருந்தின் வழித்தடம், பேருந்து எண், பக்கவாட்டில் உள்ள சீட் எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகார் கூற வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...