அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான,
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, முடிவு எடுப்பது
தாமதமாகியுள்ளது. அதனால், மார்ச் வரை, வல்லுனர் குழுவுக்கு கூடுதல் அவகாசம்
அளிக்கப்பட்டு உள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களாக, 2003க்குப்
பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், அமலுக்கு
வந்துள்ளது.
இதனால், நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால், இந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, 2016 சட்டசபை தேர்தலின் போது, ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டம் அறிவித்தன. இதை, முடிவுக்கு கொண்டு வர, 2016ல், தமிழக அரசு சார்பில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய, வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.
முதலில், இந்த குழுவுக்கு, மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. பின், ஒவ்வொரு மாதமும், அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.ஆனாலும், குழு அமைத்து, ஒன்றரை ஆண்டுகளை தாண்டியதால், ஆசிரியர்கள், 2017 செப்டம்பரில், தொடர் போராட்டம் அறிவித்தனர். எனவே, நிலைமையை சமாளிக்க, 'நவம்பர், 30க்குள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்' என, அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியிட்டு, மூன்று மாதங்களாகியும் முடிவு எடுக்கப்படவில்லை.இந்நிலையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர் குழுவுக்கு, அரசிடமிருந்து பரிந்துரைகள் கிடைக்காததால், முடிவு எடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதனால், மார்ச் வரை, வல்லுனர் குழு
தொடர்ந்து செயல்பட, நிதித்துறை சார்பில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, அரசு வட்டாரங்கள் தெரிவித்து
உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...