ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அரசு சேவைகளுக்கு
ஆதாரை தரச்சொல்லி கட்டாயப்படுத்துவது,
ஆதார் தகவல் பாதுகாப்பாகத்தான்
இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஆதார் தகவல்களைத் திருடியதாக பலர்மீது
வழக்குப் பதிவது எனக் கடந்த சில மாதங்களாகவே குழப்பத்தில்தான் இருக்கிறது
மத்திய அரசு. அரசுக்கே ஆதார்மீது அவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது
சாமானிய மக்களுக்கு இருக்காதா ?.
என்றைக்கு ஆதார் அட்டைகள் தபாலில் வீடு தேடி வந்ததோ அப்பொழுதே மக்களுக்குக்
குழப்பம் தொடங்கிவிட்டது. ஆதார் அட்டை என்றால் சிறியதாக பிளாஸ்டிக்
அட்டையில் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஆதார்
அட்டை ஒரு நீளமான காகித அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை
அளித்தது. இவ்வளவு நீள அட்டையை எப்படி எல்லா இடத்திற்கும்
எடுத்துச்செல்வது, ஆதார் அட்டையை மட்டும் தனியாக வெட்டி லேமினேஷன் செய்து
பயன்படுத்த வேண்டுமா என அப்பொழுதே பலருக்கும் சந்தேகங்கள் எழுந்தன.
லேமினேஷன் பண்ணினாலும் சில நாள்களிலேயே அட்டை கிழிந்து போய்விட ஏடிஎம்
அட்டைபோல பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டையை பிரின்ட் செய்யும் வசதியைக்
கொண்டுவந்தார்கள். பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் மக்களுக்குப் பயன்படுத்த
எளிதாக இருந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னால் பிளாஸ்டிக்
ஆதார் அட்டைகளை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று UIDAI தரப்பிலிருந்து
தகவல் வெளியானது. இது மக்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் செல்லுபடியாகுமா ?
"ஆதார் ஸ்மார்ட் கார்டுகள் என்றழைக்கப்படும் இவை நிச்சயமாக தேவையற்றவை. இவை
பிரின்ட் செய்யப்படும்போது அதிலிருக்கும் QR Code சில நேரங்களில்
பாதிப்படைகிறது. சாதாரண பேப்பரில் பிரின்ட் எடுக்கப்படும் ஆதாரோ அல்லது
மொபைலில் இருக்கும் mAadhaar போதுமானது. இவற்றை ஆதார் தேவைப்படும் அனைத்து
இடங்களிலும் பயன்படுத்தலாம்" என்று கடந்த சில நாள்களுக்கு முன்பாகத்
தெரிவித்திருந்தார் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக
அதிகாரி அஜய் பூஷண் பாண்டே . அதுபோல மக்கள் ஆதார் அட்டையை லேமினேஷன்
செய்வதையும் தவிர்க்கலாம் என்று அறிவித்திருந்தார். அவரது அறிவிப்புதான்
மக்களிடையே இப்போது குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் கூட
அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 30 ரூபாய்க்கு பிளாஸ்டிக் அட்டை அச்சிடப்பட்டு
மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கையில் எதற்காக இந்த திடீர்
அறிவிப்பு?
எதற்காக இந்த நடவடிக்கை ?
நாடு முழுவதும் ஆதார் அட்டை பரவலாகிவிட்ட நிலையில், அதன் தேவையைப்
பயன்படுத்திக்கொண்டு ஒருவரின் தகவல்களைச் சிலர் தவறாகப்
பயன்படுத்துகிறார்கள் அதைத் தடுக்கவே இந்த முயற்சி. ஒரு சில கடைகளில்
சாதாரண ஆதார் கார்டைக் கூட ஸ்மார்ட் கார்டாக மாற்றித் தருகிறோம் என்று
கூறிவிட்டு பிளாஸ்டிக் கார்டுகளை அச்சிட பலர் அதிகப்படியான பணத்தை
வசூலித்துக் கொண்டிருந்தார்கள். கலர் பிரின்ட் அவுட் எடுத்து அதை லேமினேஷன்
செய்வதற்கு 50 ரூபாய், பிளாஸ்டிக் கார்டுகளை அச்சிட வேண்டுமென்றால்
இன்னும் சற்று அதிகத் தொகை எனப் பல இடங்களில் இது நடந்து வந்தது. அதுவும்
ஆதரைப் பற்றிய அடிப்படை விவரம் தெரியாதவர்களிடமிருந்து எவ்வளவு கேட்டாலும்
கிடைக்கும் என்பதால் இந்தக் கொள்ளை தொடர்ச்சியாக நடந்து வந்தது. அதுபோல
அரசு சேவை வழங்கும் இடங்களில் இல்லாமல் வேறு இடங்களில் இந்த அட்டையை
அச்சிடும் போது QR Code சரிவர பிரின்ட் ஆகாவிட்டால் அந்த அட்டையைப்
பயன்படுத்துவது சிரமமாக இருந்து வந்தது.
தனியார் இடங்களில் அட்டையை அச்சிட தகவல்களை அளிக்கும் போது அவை தவறான
முறையில் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன்
இணையதளங்கள் சிலவற்றில் இந்த வசதி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுவும்
ஒரு வர்த்தக இணையதளத்தில் பிளாஸ்டிக் அட்டையை அச்சிட 149 ரூபாய் கட்டணம்
என்று குறிப்பிடப்பட்டிக்கிறது. ஆர்டர் செய்பவரின் ஒட்டுமொத்த தகவல்களையும்
அவர்களிடத்தில் அளித்தால் கார்டை பிரின்ட் அவுட் எடுத்து வீட்டிற்கு டோர்
டெலிவரி செய்து விடுவோம் என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரவே இந்த முடிவை UIDAI
எடுத்திருக்கிறது.
சரி ஆதார் எந்த வடிவத்தில் இருந்தால் பயன்படும்
தற்பொழுது UIDAI வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி பார்த்தால் பிளாஸ்டிக்
வடிவத்தில் இருப்பவற்றை தவிர்த்து மற்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும்.
அது ஆதார் ஆணையத்தால் அளிக்கப்பட்ட ஆதார் அட்டையாக இருந்தாலும் சரி ஒரு
ரூபாய் பேப்பரில் பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி
அனைத்துமே செல்லுபடியாகும். அதற்காக தற்போழுது இருக்கும் பிளாஸ்டிக்
அட்டைகள் பயன்படாது என்று கூறிவிட முடியாது, ஏற்கெனவே பயன்படுத்தி வந்த
பிளாஸ்டிக் அட்டைகளை இப்பொழுதும் பயன்படுத்த முடியும். ஆனால்
தமிழ்நாடுஅரசைப் பொறுத்தவரையில் மத்தியிலிருந்து வரும் கட்டளைகள்
உடனுக்குடன் பின்பற்றப்படும் என்பதால் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் ஆதார்
அட்டை மறுக்கப்பட வாய்ப்புண்டு. எனவே பேப்பரில் பிரின்ட்
செய்யப்பட்டிருக்கும் ஆதார் அட்டையை மறக்காமல் எடுத்துச் செல்வதன் மூலமாக
தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம்.
UIDAI-யின் அறிவிப்பையடுத்து இ-சேவை மையங்களில் புதிதாக பிளாஸ்டிக் ஆதார்
அட்டை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக அந்தச் சேவையை அளித்து வந்த தமிழ்நாடு
அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. எப்பொழுதும் போலவே சாதாரண A4
பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்ட ஆதார் அட்டையையே அல்லது மொபைலில் இருக்கும்
mAadhaar-ரையோ தேவைப்படும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.
ஆதாரைப் பொறுத்தவரையில் ஸ்மார்ட் அட்டை என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான்
தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கூற வரும் இறுதித் தகவல். இல்லையென்றால்
நாங்கள்தான் ஏற்கெனவே ஆதாருக்காகப் பல கோடிகளை செலவு செய்கிறோமே பின்னர்
எதற்காக நீங்கள் தேவையில்லாமல் மீண்டும் செலவு செய்கிறீர்கள் என்ற நல்ல
எண்ணத்தில் கூட UIDAI இந்த முடிவை அறிவித்திருக்கக்கூடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...