திருச்சி மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்தளித்து,
எழுது பொருட்கள் வழங்கி, தங்க நாணயம் பரிசு அறிவித்து தேர்வுக்கு அனுப்ப ஆசிரியர்களும், கிராமத்தினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பொதுத்தேர்வு நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 1, ப்ளஸ் 2 ஆகிய வகுப்புகளில் மட்டும், 210 பேர் படிக்கின்றனர்.
இந்த பள்ளி மாணவ, மாணவிகள் மரம் நட்டு வளர்ப்பதில் திருச்சி மாவட்டத்துக்கே முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியிலிருந்து பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து, சிறப்பான ஏற்பாடு ஒன்றை செய்துள்ளனர். அதன்படி, பள்ளியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட, 5 வகையான எழுது பொருட்களை பரிசாக வழங்கி, தேர்வுக்கு அனுப்ப உள்ளனர்.மேலும், கிராம மக்கள், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பில், இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் 250 ஆதரவற்றோர் காப்பக குழந்தைகளுக்கு அறுசுவையுடன் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2வில் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் பரிசாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்கான செலவை அனைத்தையும் பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் ஏற்றுக் கொண்டு, ஏற்பாடுகள் செய்துள்ளனர். நீட் தேர்வு வரும்வரை, தனியார் பள்ளிகள், கார், தங்கம், பைக் என்று அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் அறிவித்து வந்தனர். நீட் தேர்வு வந்ததால், தனியார் பள்ளிகள் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன. ஆனால் ஓந்தாம்பட்டி அரசுப்பள்ளியோ, மாணவர்களை படிக்க ஊக்குவிக்கும் வகையில் தங்கம், வெள்ளிக்காசுகள் பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...