''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
மாவட்ட கல்வி அதிகாரி களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று நடந்தது.
இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: பொது தேர்வுகளை முறையாக நடத்த, அதிகாரி களும், ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாணவர் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் சரிவதே காரணம். தேர்வு மையங்களை கண்காணிக்க, பல பள்ளிகளில், 'கேமரா' வசதி உள்ளது. அடுத்த ஆண்டில், தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ள, 3,000 மையங்களிலும், ஒவ்வொரு அறையிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். பழுதான பள்ளி கட்டடங்கள் இருந்தால், அதுகுறித்து, தகவல் அனுப்புங்கள். அவை, மாணவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் இடிக்கப்படும்.மேலும், 3,000 அரசு பள்ளிகளில், 437 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்க, விரைவில், 'டெண்டர்' வெளியிடப்பட உள்ளது.தேர்வு மற்றும் மாணவர்களின் பிரச்னைகள், குறைகளை போக்க, விரைவில், உதவி மையம் துவங்கப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.'காப்பி' அடிக்கும் நிலை வராது!
அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பொது தேர்வுகளை முறையாக நடத்தும்படி, அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதுவரை, மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
'நீட் தேர்வுக்கு விலக்கு வராவிட்டால், அந்த தேர்வில், மாணவர்களை காப்பியடிக்க வைப்போம்' என, சிலர் பேசியுள்ளனர். தமிழக மாணவர்கள், எந்த தேர்விலும் காப்பியடிக்கும் நிலை ஏற்படாது. அந்த அளவுக்கு, கல்வித் தரத்தை மேம்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...