மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று, 2018 - 19ம் நிதியாண்டின் மத்திய
பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். இது, பா.ஜ., அரசின்
கடைசி பட்ஜெட் என்பதால், ஊதியதாரர்கள், நிறுவனங்கள், நுகர்வோர் உட்பட,
அனைத்து தரப்பிலும், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எர்னஸ்ட் யங் நிறுவனம் நடத்திய ஆய்வில், 69 சதவீதம் பேர், வருமான வரி வரம்பு உயரும் என, நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். மத்திய பட்ஜெட்டில், வருமான வரி வரம்பு, தற்போதைய, 2.50 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, தெரிகிறது. 'இதனால், 75 லட்சம் பேர், வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவர்' என, எஸ்.பி.ஐ., எகோரப் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது, 3 - 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரம்பு, 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம். இதையடுத்து, 6 - 12 லட்சம் ரூபாய் வரை, 20 சதவீதம்; 12 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, 30 சதவீதம் என, வரி நிர்ணயிக்கப்படலாம். ''இதனால், 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வருவாயினருக்கு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைக்கும்,'' என கூறுகிறார், வரி ஆலோசகரான, ரவி குப்தா.
மத்திய தர வகுப்பினர், குறிப்பாக, மாத ஊதியம் பெறுவோருக்கு, வரி வரம்பு உயர்வு மூலம், ஓரளவு நிவாரணம் கிடைக்கும். மத்திய அரசு, 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என, தெரிகிறது.
கார்ப்பரேட் நிறுவன வரி, 30 சதவீதத்தில் இருந்து, படிப்படியாக, 25 சதவீதமாக குறைக்கப்படும் என, 2016 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், 5 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு, 29 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. இது, மேலும் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விற்பனையில், மூலதன ஆதாய வரி விலக்கு வரம்பு, ஓராண்டில் இருந்து, மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படலாம். மத்திய அரசு, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக உள்ளது.குறிப்பாக, தொழிலாளர்கள் சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், தேசிய வேலைவாய்ப்புகொள்கை, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் வருவாயை, 2022ல் இரு மடங்காக உயர்த்துவோம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, பட்ஜெட்டில், கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நல திட்டங்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய பட்ஜெட்டில், வேளாண் துறை, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை, அடிப்படை கட்டமைப்பு வசதி, அனைவருக்கும் வீடு ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என, தெரிகிறது.
-சவுமியா காந்தி கோஷ், பொருளாதார வல்லுனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...