ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், மு.சுப்பிரமணியன், ஆர்.தாமோதரன், மோசஸ், இரா.தாஸ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்தும், 7-வது சம்பள கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்ட முடிவில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வல்லுனர் குழு அறிக்கை
ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுத்துவருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக அரசால் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த வல்லுனர் குழு தனது அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தொடர்ந்து காலநீட்டிப்பு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விரைவாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஊதிய முரண்பாடு
ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், கல்லூரி-பல்கலைக்கழக பேராசிரியர்கள், அமைப்பு பணியாளர்கள்-கண்காணிப்பாளர்கள், தலைமை செயலக ஊழியர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலக பகுதி ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் இதுவரை வழங்கப்பட்டுவரும் மதிப்பூதியம் மற்றும் தொகுப்பூதியத்தை ரத்துசெய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
தொடர் மறியல்
ஊதியக்குழுவுக்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஆகியோர் மட்டும் 1.1.16 முதல் புதிய ஊதியத்தை பெற்றுவருகின்றனர். ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் 1.10.17 முதல் ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கும் 1.1.16 முதல் ஊதியம் கணக்கிட்டு நிலுவைதொகை வழங்க வேண்டும்.
இந்த 4 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் வருகிற 21-ந் தேதி முதல் சென்னையில் தலைமை செயலகம் உள்பட முக்கிய இடங்களை முற்றுகையிட்டு, தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம். போராட்டத்துக்கான ஆயத்தக்கூட்டம் தமிழகத்தில் 11 இடங்களில் வருகிற 11-ந் தேதி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருப்பன் குசும்புக்காரன் 21மாச அரியர்க்கு உண்டிய குலுக்க ஆரம்பிச்சுட்டான்
ReplyDelete