அரசு பணிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்புவதற்காக, நேற்று
நடந்த, 'குரூப் - 4' தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில்,
குரூப் - 4 தேர்வு, நேற்று நடந்தது. கிராம நிர்வாக அதிகாரியான, வி.ஏ.ஓ.,
பதவிக்கு, இதுவரை தனியாகத் தான் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை,
குரூப் - 4 தேர்வில், முதன்முதலாக, வி.ஏ.ஓ., பணியில், 494 காலி இடங்களும்
சேர்க்கப்பட்டன. மேலும், இளநிலை உதவியாளர், 4,301; தட்டச்சர், 3,463 என,
எட்டு வகை பதவிகளில், 9,351 காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தத் தேர்வு
நடந்தது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையிலான இத்தேர்வு, நேற்று
மாநிலம் முழுவதும் நடந்தது. மொத்தம், 6,962 தேர்வு மையங்களில், 20
லட்சத்து, 69 ஆயிரத்து, 274 பேர் தேர்வு எழுதும் வகையில், ஹால்
டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதில், 11.27 லட்சம் பேர் பெண்கள்; 54
திருநங்கையர்; 25 ஆயிரத்து, 906 மாற்றுத்திறனாளிகள்; 7,367 கணவனை இழந்த
பெண்கள், 4,107 முன்னாள் படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால்,
தேர்வில், 17.53 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர்; 3.16 லட்சம் பேர்
தேர்வுக்கு வரவில்லை. தேர்வு கண்காணிப்பு பணியில், 1.03 லட்சம் பேர்
ஈடுபட்டனர்; 1,165 மொபைல் கண்காணிப்பு குழுக்கள், 685 பறக்கும் படைகள்
பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 170 மையங்களில், கேமரா பொருத்தப்பட்டு,
ஆன்லைனில் கண்காணிக்கப்பட்டது. இதுவரை நடந்த, எந்த தேர்விலும் இல்லாத
அளவில், ஒரு போட்டி தேர்வுக்கு, 21 லட்சம் பேர் விண்ணப்பித்து, அதில், 17
லட்சத்து, 52 ஆயிரத்து, 882 பேர் பங்கேற்றதும், தேர்வு அமைதியாக
முடிந்ததும் சாதனையாக கருதப்படுகிறது.
புது வசதி அறிமுகம் : குரூப் - 4 தேர்வில் புதிய வசதியாக, தேர்வர்களின்
பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம் மற்றும் தேர்வு மையத்தின்
பெயர் ஆகியவை, தேர்வர்களின் விடைத்தாளில் அச்சிடப்பட்டிருந்தன. மேலும்,
தேர்வில் பதில் அளிக்காமல் விடுபடும் வினாக்களின் கட்டங்களை கணக்கிட்டு,
தேர்வரே எழுத வேண்டும் என்ற, புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...