நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில்
நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அழைத்து பேச்சு வார்த்தை
நடத்தும் வரையில் இந்த மறியல்போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ-ஜியோ
ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த மதுரை உயர்நீதி மன்ற நீதிமன்றம், அந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், அது தொடர்பான வழக்கில் அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
இதையடுத்து, மீண்டும் போராட்டங்களை நடத்தப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். அதன்படி 21ம் தேதி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். நேற்று முன்தினம் அரசியல் தலைவர்களையும் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.
இதையடுத்து, நேற்று காலை 10 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மறியல் போராட்டத்தை நடத்தினர். மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்றைய போராட்டத்துக்கு தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சுரேஷ், மோசஸ் ஆகிய மூன்று பேர் தலைமைப் பொறுப்பு வகித்தனர்.
அவர்கள் தலைமையில், ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி கோஷமிட்டபடி சென்றனர். பின்னர் பீச் சாலையில் மறியல் நடத்தவும் முயன்றனர். ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு முன்னதாகவே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் குறித்து மோசஸ்,சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: மறியல் போராட்டம் என்று அறிவித்த பிறகு நேற்று அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒன்று, ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதான அறிவிப்பு. குழு அமைக்க நாங்கள் எப்போதும் கோரிக்கை வைக்கவில்லை.
அலுவலர்களை குறைக்கும் விதமாக ஸ்டாப் ரேஷனிசேஷன் கமிட்டி என்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு எதிரான ஒரு அரசாணையை இந்த அரசு வெளியிட்டுள்ளது. பணியிடங்களை குறைத்து தனியார் மூலம் ஆட்களை நிரப்பும் ஒரு ஆணை இது. இதை எதிர்த்தும் இந்த மறியல் போராட்டம் நடக்கும். நாளை முதல் இந்த மறியல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். அதனால் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும். இவ்வாறு மோசஸ், சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...