3.20 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்“ஏ” திரவம் நாளை முதல் வழங்கப்படுகிறது சேலம் மாவட்டத்தில் கண்பார்வை குறையை போக்க 3.20 லட்சம்
குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ“ திரவம் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்கப்பட
உள்ளதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி தெரிவித்தார்.
வைட்டமின் “ஏ“ என்ற உயிர்சத்து உடலுக்கு இன்றியமையாத ஒரு
ஊட்டச்சத்து ஆகும். இந்த சத்து ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய
பங்களிக்கிறது. இதுமட்டுமில்லாமல் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு
சக்திக்கும், தோல் திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான
ஊட்டச்சத்தாகும்.
வைட்டமின் “ஏ“ உயிர்சத்து கனிகளான மாம்பழம், பப்பாளி மற்றும்
கேரட், தக்காளி பச்சைக்கீரை வகைகள் மற்றும் பால், மாமிச உணவுகளான மீன்
மற்றும் முட்டையில் அதிகமாக உள்ளது. இந்த சத்து குறைபாட்டினால் வறண்ட
விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல்
மற்றும் மாலைக்கண் நோய் போன்றவைகள் ஏற்படும். இவற்றிற்கு தக்க சிகிச்சை
அளிக்கப்படவில்லை என்றால் பார்வை இழக்க நேரிடும்.
கண்பார்வை குறைபாட்டை போக்க தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு
முறை வைட்டமின் “ஏ“ திரவம் நாடு முழுவதும், பிறந்த 6 மாதக்குழந்தை முதல் 5
வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த
ஆண்டு முதல் தவணையாக நாளை(திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரை சேலம்
மாவட்டம் முழுவதும் வைட்டமின் “ஏ“ திரவம் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது.
அதாவது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார
நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த
முகாம்களில் சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்
ஆகிய துறைகளை சேர்ந்த 3 ஆயிரத்து 72 பணியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
முகாமை மேற்பார்வையிட 459 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 965
குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ“ திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் “ஏ“ திரவத்தை
அளித்து கண் பார்வை குறைபாடு இல்லாத இளைய சமுதாயத்தினரை உருவாக்க
பாடுபடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...