தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் புதிய
பாடத்திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று
வருகிறது.
தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய
பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து
இந்தப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக வல்லுநர்கள் கொண்ட குழுக்கள்
அரசின் சார்பில் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய வரைவுப் பாடத்
திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் கடந்த நவம்பர் 20 ஆம்
தேதி வெளியிட்டார். இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள்,
பேராசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக கருத்துகள், திருத்தங்கள்,
கோரிக்கைகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட கருத்துகளில் ஏற்க தகுந்த
விஷயங்கள் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புத்தகம் எழுதும் பணி தொடங்கியது.
மொத்தம் 69 பாடப் பிரிவுகள், பிறமொழிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட
தலைப்புகளில் பாடநூல்கள் எழுதப்பட்டுள்ளன. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் இந்தப் பணியை ஏராளமான பேராசிரியர்கள்,
ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். முதல் கட்டமாக இந்தப் பாட நூல்கள் ஆங்கில
வடிவில் தயாராகியுள்ளன.
இதையடுத்து தமிழ் வடிவில் பாடநூல்கள் தொகுக்கும் பணி நடைபெறும். இந்தப் பணி
சில நாள்களில் முடிவுறும். இதைத் தொடர்ந்து பாடநூல் குறித்தத் தகவல்கள்
சி.டி.க்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் புதிய பாடநூல்கள்
அச்சடிக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி
ஜூன் மாதம் பள்ளி திறக்கும்போது 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய
பாடத்திட்டத்தின்படி கற்றல் பணிகள் தொடங்கும் எனப் பாடத்திட்டக் குழுவினர்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...