அரசு ஊழியர்களுக்கு 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்குவது,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உட்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சென்னை மாவட்டம் சார்பில் டிபிஐ வளாகத்தில்நேற்று மதியம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் கு.தேவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை அமைப்பாளர்கள் ஆர்.தரணிதரன், கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தேர்வுத் துறை பணியாளர் சங்கத் தலைவர் மு.குமார், பொதுச்செயலாளர் கோ.ராதாகிருஷ்ணன், மாநில பிரச்சார செயலாளர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் உமா செல்வராஜ் சிறப்புரையாற்றிப் பேசும்போது, “தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் 7-வது ஊதியக்குழு சம்பள விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 21 மாத கால நிலுவைத்தொகையை அரசு வழங்கவில்லை. எனவே, அந்த நிலுவைத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், பழையஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் குழு இன்னும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை.
அரசுஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.அரசுப் பணியாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளர் மு.நாகராஜன், மாநில துணைப் பொதுச்செயலாளர் கிஷோர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் அனைவரும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். நிறைவாக, மாநில செயற்குழு உறுப்பினர் மு.சரவணவேல் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...