பிரபல
பிர்லா கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, தேசிய அளவிலான நுழைவு தேர்வு,
மே, 16 முதல், 31 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. பிரபல பிர்லா
நிறுவனத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ராஜஸ்தான் மாநிலம், பிலானியில்
இயங்குகின்றன.
இந்த நிறுவனம், 'பிட்ஸ் பிலானி' என, பிரபலமாக பேசப்படுகிறது. இதில், படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, உடனடியாக அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.தற்போது, பிலானியில் மட்டுமின்றி, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும், பிர்லா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, 'பிட்சாட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான, பிட்சாட் நுழைவு தேர்வு நேற்று, அறிவிக்கப்பட்டது. மே, 16 முதல், 31 வரை, கணினி வழி தேர்வாக, நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு நேற்று துவங்கியது. மார்ச், 13 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, 50 இடங்களில், தேர்வு மையங்கள் அமைய உள்ளன. 150 மதிப்பெண்களுக்கு, இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கில மொழித்திறன் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.இதில், தமிழக பாடத்திட்டம் உட்பட, நாட்டின் எந்த பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்கலாம்.
பிளஸ் 2வில், மாநில அளவில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றாலும், அவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்படி, நேரடி மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விபரங்களை, http://www.bitsadmission.com/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...