ஊதியம் தொடர்பாகப் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களைக் கூடுதலாகப் பணி செய்ய தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தங்கள் ஊதிய உயர்வு மற்றும் இதர பிரச்னைகளுக்காக நியாயமான போராட்டத்தை நடத்தினார்கள். அரசு தரப்பிலும், போக்குவரத்து நிர்வாகத் தரப்பிலும் தொழிலாளர்களுக்கு உடன்பாடு எட்டப்படாததால், நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொண்டார்கள். இதை ஏற்றுக்கொள்ளாத அரசு தற்போது நிர்வாகத்தின் மூலம், தொழிலாளர்களுக்குப் பல இன்னல்களைக் கொடுத்து வருகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
“ஓட்டுநர், நடத்துநர்கள் தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு பணியாற்றும்படி கட்டாயப்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஆளும்கட்சியைச் சேர்ந்த சில தொழிலாளர்களுக்குப் பொங்கல் விடுமுறை கொடுத்துவிட்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களைக் கூடுதல் பணி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மனஉளைச்சலோடு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உயிர்ச்சேதம், விபத்து ஏற்பட்டால், நிர்வாகமும் அரசும் முழு பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்துக் கழகத்தில் நிர்வாகம் செய்யும் தவறுகளை மூடி மறைப்பதற்குத் தொழிலாளர்கள்மீது வீண் பழி போடுவதும், கூடுதல் பணி செய்ய கட்டாயப்படுத்துவதும், விடுமுறை கொடுக்க மறுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ள அவர், “போக்குவரத்துக் கழகத்தை எப்படி சீர்செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து தொழிலாளர்களையும், பொதுமக்களையும் பாதிக்காத வண்ணம் போக்குவரத்துத் துறை வளர்ச்சி அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...